தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சியை அகற்ற வேண்டும்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்!

தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சியை அகற்ற வேண்டும் என்றும், பாஜக குடும்ப ஆட்சி செய்திடும் கட்சி இல்லை எனவும் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்து இருக்கிறார்.

சென்னை வந்துள்ள மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மத்திய அரசு சார்ந்த நிகழ்வுகள், பாரதிய ஜனதா கட்சி சார்ந்த பல நிகழ்வுகளில் கலந்துகொண்டு வருகிறார். சென்னை மடிப்பாக்கத்தில் மத்திய அரசின் நலத்திட்டங்களை வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கலந்துகொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

வளர்ச்சிக்கான பணிகளை உடனே தொடங்க வேண்டும். நாம் இழப்பதற்கு இங்கு எதுவும் இல்லை. அனைத்துக்கும் இதுவே சரியான நேரம். எல்லா நேரமும் நல்ல நேரம்தான். சேரும் சகதியுமான நிலத்தில் இருந்துதான் தாமரை மலரும். அதேபோல் எந்த நிலத்தில் பாவமும், எங்கு பிரச்சனையும் உள்ளதோ அங்குதான் நம்முடைய தாமரை மலரும். தமிழ்நாட்டில் தாமரை மலரும். நாம் இங்கு ஊழலை ஒழிப்போம். நாம் இங்கு நல்ல அரசாங்கத்தையும் கொடுப்போம்.

நமது தமிழ்நாடு கொள்கையில் குடும்ப அரசியலுக்கு இடமே இல்லை. பாஜகவில் குடும்ப ஆட்சி செய்யும் கட்சி அல்ல. நாம் இங்கு மாநிலத்தை கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும் 2 அல்லது 3 குடும்பங்களை கொண்டிருக்கவில்லை. இங்குள்ள நமது ஒவ்வொரு தொண்டரும் எழுச்சிபெற்று மாநில நலனுக்காக பாடுபட வேண்டும். தமிழ்நாட்டில் இருந்து குடும்ப ஆட்சியை அகற்றிட வேண்டும். இங்கு பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களான உங்கள் அனைவரிடத்திலும் பிரதமர் மோடி மீதான அன்பையும் பற்றுதலையும் பார்க்க முடிகிறது. இதனை காண்கையில் பாஜக தமிழ்நாட்டில் நிச்சயமாக எழுச்சி பெறும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.