காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சசி தரூருக்கு ஆதரவு: கார்த்தி சிதம்பரம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் நான் சசி தரூருக்கு ஆதரவளிக்கிறேன். நீங்களும் அவருக்கு வாக்களிக்க வேண்டும் என்று பணிவோடு கேட்டுக்கொள்கிறேன் என்றும் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி செயல்பட்டு வரும் நிலையில் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல், வரும் அக்டோபர் 17ஆம் தேதி நடக்கவுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 22 ஆண்டுகளுக்கு பிறகு தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கேவும், முன்னாள் மத்திய அமைச்சரும் கேரளாவை சேர்ந்தவருமான சசி தரூரும் நேருக்கு நேர் போட்டியில் இறங்கி உள்ளனர். காங்கிரஸ் தலைவர் தேர்தலில், அகில இந்திய அளவில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வாக்களிக்க உள்ளனர். தமிழகத்தில் 711 பேர் வாக்களிக்க உள்ளனர்.

இந்த நிலையில், 2 தலைவர்களும் தங்களுக்கு ஆதரவாக வாக்குகளை சேகரித்து வருகின்றனர். கடந்த வாரத்தில் சசி தரூர் சென்னை வந்து தமிழகத்தில் ஆதரவு திரட்டிய நிலையில், சமீபத்தில் மல்லிகார்ஜுன கார்கே சென்னை வந்து காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் ஆதரவு திரட்டினார். மல்லிகார்ஜூன கார்கேவுக்கு சோனியா காந்தியின் ஆதரவு உள்ளது எனக் கூறப்பட்டு வருகிறது. தலைவர் பதவிக்கு மல்லிகார்ஜூன கார்கேவை எதிர்த்து போட்டியிடும் சசி தரூரும் இதுபற்றி அதிருப்தி தெரிவித்திருந்தார். மாநில காங்கிரஸ் கமிட்டிகள் கார்கேவுக்கு கொடுப்பது போல தனக்கு வரவேற்பு கொடுக்கவில்லை. இருவரையும் நடத்துவதில் வேற்றுமை நிலவுகிறது என வெளிப்படையாகவே குற்றம்சாட்டி இருக்கிறார்.

இந்நிலையில், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினரும், ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சசி தரூரை ஆதரிப்பதாக அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

சோனியா காந்தி, ராகுல் காந்தி, கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் எந்த ஒரு வேட்பாளருக்கும் வெளிப்படையாக ஆதரவு அளிக்கவில்லை. போட்டியிடும் வேட்பாளர்கள் இடையே ஆரோக்கியமான போட்டி நடந்து வாக்களிக்க தகுதி உடையவர்கள் தங்கள் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும் என்பதுதான் அவர்களது விருப்பம்.

சோனியா காந்தி ஏதோ ஒரு வேட்பாளரை மட்டும் விரும்புகிறார் என்று தவறாக சிலர் பரப்பி வருகிறார்கள். அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. எனவே, வாக்களிக்க தகுதியுடைய அத்தனை காங்கிரஸ் நண்பர்களும் தங்கள் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும். நான் சசி தரூருக்கு எனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்களும் அவருக்கு வாக்களிக்க வேண்டும் என்று பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.