வட மாநிலங்களில் திமுகவையோ, ஸ்டாலினையோ யாருக்கும் தெரியாது என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு, மத்தியப் பல்கலைக்கழகங்கள் உட்பட அனைத்து தொழில்நுட்ப அல்லது தொழில்நுட்பம் அல்லாத கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழி கட்டாயமாக இந்தியாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. இதற்கு திமுக தரப்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்தி திணிப்பு மற்றும் ஒரே பொது நுழைவுத் தேர்வு திட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி திமுக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில்,தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதற்கு பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறியதாவது:-
மின் கட்டண உயர்வால் கொந்தளித்துள்ள மக்களை திசை திருப்புவதற்காக இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை திமுக நடத்தியுள்ளது. 1965ம் ஆண்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நேரில் பார்த்துள்ளேன். அப்போது மக்களிடையே ஒரு உணர்வு இருந்தது. மக்கள் அதிகளவில் பங்கேற்றனர். ஆனால் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் சாலை ஓரத்தில் நடத்தப்பட்ட ஒரு தமாஸ்.
திமுகவின் மொழிக் கொள்கை எவ்வளவு ஏமாற்றுக் கொள்கை என்பது மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். தமிழில் எழுதத் தெரியாத தமிழர்கள் உருவாக்கி இருக்கிறார்கள். வெறும் பேசு மொழியாக தமிழை திராவிட மாடல் ஆட்சி மாற்றியுள்ளது. ஆனால் பிரதமர் மோடி தமிழை பெருமையாக பேசி வருகிறார். வடமாநிலங்களில் தமிழ் வகுப்பு நடக்கிறது. தமிழை கையில் எடுத்ததன் மூலம் பாஜகவிற்கு ஒரு வாய்ப்பை கொடுத்துள்ளார்கள். திமுக நிர்வாகிகள் நடத்தும் பள்ளிகளில், சமச்சீர் கல்வியை நடத்தாமல், ஏன் சிபிஎஸ்இ பாடம் நடத்தப்படுகிறது. இந்தி எதிர்ப்பு என்ற பெயரில் திமுக நாடகமாட கூடாது. தேசிய கல்விக் கொள்கையில் மூன்றாம் மொழியாக பிடித்த மொழியை தான் படிக்க வலியுறுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, சமூக நீதி மற்றும் கூட்டாட்சி நோக்கம் கொண்டவர்களின் ஆட்சி தான் அடுத்து அமையும் என்று முதல்வர் ஸ்டாலின் பேசிய கருத்து குறித்த கேள்விக்கு, வெறுப்பு அரசியலுக்கு பெயர் சமூக நீதி அல்ல. திமுக மாடல் என்பது வெறுப்பு அரசியலை மையமாக கொண்டது. பிரதமர் மோடி நாடு முழுவதும் சமூக நீதியை செயல்படுத்தி வருகிறார். வடக்கில் திமுக, ஸ்டாலின் என்றால் யார் என்றே தெரியாது. திமுக ஒரு கிணற்றுத் தவளை. திமுக மக்களை ஏமாற்றிய கும்பல். தமிழின் பெருமையை உணர்ந்து செயல்படும் கட்சி பாஜக. தமிழ் உணர்வை அழிக்க பயன்படுத்தும் சொல்தான் திராவிடம் என்று தெரிவித்தார்.