ஆளுநர் ஆர்என் ரவியிடம் 19 கேள்விகளை சென்னை வழக்கறிஞர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்டதற்கு ஆளுநர் மாளிகை விளக்க கடிதம் அனுப்பி உள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்என் ரவி சமீப காலமாக பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசி வருகிறார். இவரது பெரும்பாலான பேச்சுக்கள் விவாதத்துக்கு உள்ளாகி வருகின்றன. இதற்கு சனாதன தர்மத்தின் சிறப்புகள் பற்றியும், இந்து தர்மம் பற்றியும் ஆளுநர் பேசி வருவது தான் முக்கிய காரணமாகும். ஆளுநர் ஆர்என் ரவி தொடர்ச்சியாக சனாதன தர்மம், திருக்குறள் பற்றி பேசி வருகிறார். சனாதன தர்மத்தை பெருமையாகவும், திருக்குறள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளதாகவும் ஆர்என் ரவி கூறி வருகிறார். இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பை பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் எஸ் துரைசாமி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் 19 கேள்விகள் கேட்டு ஆளுநர் மாளிகைக்கு மனு அனுப்பினார். சனாதன தர்ம கொள்கைகள் என்ன? அதில், சனாதன தர்மத்தின் கொள்கைகள் என்ன?, சனாதன தர்மத்தை உருவாக்கியவர் யார்?, சனாதன கொள்கைளுக்கு உரைகள் உள்ளதா?, தமிழ் இலக்கியம் அல்லது திராவிட கலாச்சாரத்தில் சனாதன தர்மம் குறித்து எழுதப்பட்டுள்ளதா அல்லது பேசப்பட்டுள்ளதா?, சனாதன தர்மத்தை கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் பின்பற்றுகிறார்களா? என கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தது.
மேலும், உலகில் பிற நாடுகளில் சனாதன தர்மம் பின்பற்றப்படுகிறதா? பண்டைய தமிழ் இலக்கியங்களில் இந்து என்ற சொல் இடம் பெற்றுள்ளதா?, ஆங்கிலேயர்கள் இந்து சட்டம் கொண்டு வருவதற்கு முன்பு திராவிடர்களுக்கு இந்து தர்மம் பற்றி தெரியாது என்பது உண்மையா?, இந்து என்கிற வார்த்தையை உருவாக்கியது யார்?, அதன் அர்த்தம் என்ன?, சனாதன தர்மத்தில் கூறப்படும் கடவுள்கள் உயிருடன் இருக்கிறார்களா?, எங்கு வசிக்கிறார்கள்? எனவும் கேள்விகள் கேட்கப்பட்டது. ஆர்எஸ்எஸ் உறுப்பினரா நீங்கள்? மேலும், ஆர்எஸ்எஸ் உறுப்பினரா நீங்கள்?, தந்தை பெரியாரின் கொள்கையை ஏற்பீர்களா?
இந்து மதத்தில் சதுர் வர்ண தர்மத்தை உருவாக்கியது யார்? நீங்கள் அதை பின்பற்றுகிறீர்களா?, தமிழக அமைச்சரவையின் ஒப்புதல் இன்றி நிகழ்ச்சிகளில் பேச அரசியலமைப்புச் சட்டத்தில் விதி உங்களுக்கு அதிகாரம் வழங்கி உள்ளதா?, அதிகாரம் இல்லாவிட்டால் அது அரசியலமைப்பு மீறல் இல்லையா? என்பன உள்ளிட்ட 19 கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டுள்ள இந்த கேள்விகளுக்கு 2 மாதத்துக்கு பிறகு கடந்த 12ம் தேதி ஆளுநர் மாளிகை சார்பில் வழக்கறிஞர் துரைசாமிக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆளுநர் மாளிகையின் மக்கள் தொடர்பு அதிகாரியாக உள்ள ராமபிரபா விளக்க கடிதம் அனுப்பி உள்ளார். அதில், ‛‛ஆளுநரிடம் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கான பதில் எந்த வடிவிலும் தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 இன் கீழ் வராது. இதுதொடர்பான விபரங்கள் ஆளுநர் செயலகத்தில் இல்லை” என கூறப்பட்டுள்ளது.