சென்னையில் சத்யா என்ற ஒரு மாணவிக்கு நடந்த துயரத்தை அறிந்து நான் நொறுங்கி போயிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்
சென்னை பரங்கிமலை ரயில்நிலையத்துக்கு வந்து கொண்டிருந்த மின்சார ரயில் முன்பு, கல்லூரி மாணவி சத்யாவை தள்ளி விட்டு சதீஷ் என்ற இளைஞர் படுகொலை செய்துள்ளார். மகளை இழந்த சோகத்தில் மன அழுத்ததில் இருந்த அவரது தந்தை மாணிக்கம், தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், 7 தனிப்படைகள் அமைத்து ஈசிஆர் பகுதியில் சுற்றித் திரிந்த அவரை கைது செய்துள்ளனர். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், மாணவி சத்யாவுக்கு நடந்த துயரத்தை அறிந்து நான் நொறுங்கி போயிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார். சென்னை, இராயப்பேட்டை, புதுக்கல்லூரியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
சென்னையில் சத்யா என்ற ஒரு மாணவிக்கு நடந்த துயரத்தை அறிந்து நான் நொறுங்கி போயிருக்கிறேன். நான் மட்டுமல்ல, அதைப் படித்த, அறிந்த அத்தனை பேர்களுமே, நீங்கள் எல்லாம் துக்கத்தில் இருந்திருப்பீர்கள், துயரத்தை அடைந்திருப்பீர்கள். இது போன்ற சம்பவங்கள், இனி தமிழகத்தில் நிகழக்கூடாது, இதுவல்ல நாம் காண விரும்பக்கூடிய சமூகம். இனி எந்தப் பெண்ணுக்கும் இதுபோல, நடக்காமல் தடுக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.
தங்கள் பிள்ளைகள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அறிவாற்றலிலும், தனித்திறமையிலும், சமூக நோக்க மனப்பான்மையும் கொண்டவர்களாக அவர்களை பெற்றோர்கள் வளர்க்க வேண்டும். பாடப் புத்தகக் கல்வி மட்டுமல்ல, சமூகக்கல்வி அவசியமானது. தன்னைப்போலவே, பிற உயிரையும், மதிக்க, பாதுகாக்க கற்றுத்தர வேண்டும். நல்லொழுக்கமும், பண்பும் கொண்டவர்களாக, அவர்கள் வளர்ந்து, வாழ்ந்து இந்த சமூகத்துக்கான தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும். அவர்கள் எந்தவகையிலும் திசை மாறி சென்று விடாதபடி வளர்க்க வேண்டிய பெரும் பொறுப்பு பெற்றோருக்குத்தான் இருக்கிறது.
இயற்கையில், ஆண் வலிமையுடையவனாக இருக்கலாம். அந்த வலிமை அடுத்தவர்களை கட்டுப்படுத்துவதாக இருக்கக்கூடாது. பெண்களை பாதுக்காக்கக் கூடியதாக அந்த வலிமை இருக்க வேண்டும். சில இளைஞர்கள் என்னமாதிரியாக வளர்கிறார்கள் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது. பள்ளி, கல்லூரிகளும், பெற்றோர்களும் சேர்ந்து இளைய சக்திகளை பாதுகாக்க அவர்களை எல்லாம் வளர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.