தாய்லாந்தில் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழர்களை உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:-
மியான்மரில் சட்டவிரோத கும்பலிடமிருந்து நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீண்ட தமிழகத்தைச் சேர்ந்த 8 பேரும், கேரளத்தைச் சேர்ந்த ஒருவரும் தாய்லாந்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. கைதாகியுள்ள தமிழர்கள் எந்த குற்றமும் செய்யவில்லை. அவர்களின் விசா காலாவதியாகிவிட்டது என்பது தான் அவர்கள் மீதான குற்றச்சாட்டு. குறுகிய கால விசாவில் சென்றவர்கள் சட்டவிரோத கும்பலிடம் சிக்கிக் கொண்டதால் தான் விசா காலத்தை அவர்களால் நீட்டிக்க முடியவில்லை.
கைதாகியுள்ள தமிழர்கள் குற்றவாளிகள் அல்ல. அவர்களை பாதிக்கப்பட்டவர்களாகவே பார்க்க வேண்டும். பணம், உழைப்பு, நிம்மதி, எதிர்காலம் உள்ளிட்ட அனைத்தையும் இழந்து நிற்கும் அவர்களை ரூ.43,500 அபராதம் செலுத்தும்படி தாய்லாந்து அரசு கட்டாயப்படுத்துவது நியாயமல்ல. சட்டவிரோத கும்பலிடம் சிக்கிய அவர்களின் நிலை தெரியாமல் தவிக்கும் குடும்பத்தினரின் மன உளைச்சலை மேலும் அதிகரிக்கக் கூடாது. மத்திய, மாநில அரசுகள் இந்த விஷயத்தில் தலையிட்டு தாய்லாந்தில் சிறை பிடிக்கப்பட்டுள்ள 8 தமிழர்கள் உள்ளிட்ட 9 பேரையும் உடனடியாக மீட்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.