ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் 4 பேர் மீது பாய்ந்த மின்சாரம்!

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை ஊர்வலத்தில் 4 பேர் மீது மின்சாரம் பாய்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கொடி கட்டப்பட்ட இரும்பு கம்பி மின்வயரில் உரசிய நிலையில் மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்டனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தனது செல்வாக்கை நிரூபிக்க போராடி வருகிறது. கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்பட உள்ள நிலையில் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைப்பயணத்தை துவக்கி உள்ளார் இந்தியா முழுவதும் கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை எனும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை ராகுல்காந்தி துவங்கி உள்ளார். கன்னியாகுமரில் இருந்து காஷ்மீர் வரை 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 150 நாட்கள் நடைபெறும் இந்த நடைப்பயணம் கடந்த மாதம் 7 ம் தேதி கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபத்தில் துவங்கியது. சுமார் 3,500 கிலோமீட்டர் தொலைவை ராகுல் காந்தி 150 நாட்களில் கடக்க உள்ளார். இந்த பாத யாத்திரை தமிழ்நாடு, கேரளாவை கடந்து தற்போது கர்நாடகத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது வரை ராகுல் காந்தி 1000 கிலோமீட்டரை கடந்துள்ளார்.

நேற்று 39 வது நாளாக பாரத் ஜோடோ யாத்திரை துவங்கியது. கர்நாடகாவின் பல்லாரி மாவட்டத்தில் உள்ள சங்கனக்கல்லு கிராமத்தில் ராகுல் காந்தி பாதயாத்திரையை துவங்கினர். இதில் வழக்கம்போல் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். கைகளில் காங்கிரஸ் கட்சியின் கொடியை ஏந்தி ஏராளமானவர்கள் பங்கேற்றனர். இந்த வேளையில் ஒருவர் இரும்பு கம்பியின் மேற்புறத்தில் காங்கிரஸ் கட்சியின் கொடியை கட்டி உயரே பறக்கவிட்டு கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கொடி கட்டப்பட்டு இருந்த இரும்பு கம்பி மின்வயரில் உரசியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த நபரை மின்சாரம் தாக்கியது. மேலும் அவருடன் நின்ற மேலும் 3 பேரின் மீதும் மின்சாரம் பாய்ந்தது. மின்சாரம் தாக்கி 4 பேரும் காயமடைந்தனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் 4 பேரையும் மீட்டு அருகே இருந்த ஆம்புலன்சில் ஏற்றி முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதன்பிறகு மேல் சிகிச்சைக்காக அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என டாக்டர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் நேற்று பாரத் ஜோடோ யாத்திரையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே சம்பவம் குறித்து அறிந்த ராகுல் காந்தி உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 4 பேரையும் சந்தித்து கனிவாக நலம் விசாரித்தார். மேலும் அவர்களின் கைகளை பிடித்தும், தோளை தட்டிக்கொடுத்தும் ஆறுதல் கூறினார். அதோடு காயமடைந்த 4 பேரின் செலவுக்கும் தலா ரூ.1 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என ராகுல் காந்தி தெரிவித்தார். மேலும் காயமடைந்தவர்களின் நிலை என்ன? என்பது குறித்து பணியில் இருந்த மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்டறிந்த ராகுல் காந்தி அவர்களின் உரிய சிகிச்சை அளிக்கும்படியும் கேட்டு கொண்டார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து ராகுல் காந்தி தனது பேஸ்புக் பக்கத்தில் கவலையை பகிர்ந்து கொண்டதோடு, கட்சி தொண்டர்களுக்கு அன்பான முறையில் அறிவுரை ஒன்றையும் வழங்கினார். இதுதொடர்பாக ராகுல் காந்தி தனது பேஸ்புக் பக்கத்தில், ‛‛இன்று யாத்திரையின் போது ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்தது. கட்டி கொடியை கட்டியபோது நண்பர்கள் சிலரை மின்சாரம் தாக்கியது. இவர்கள் பல்லாரி மெக்கா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு பெரிய காயங்கள் ஏதும் ஏற்படவில்லை. மேலும் அவர்களின் மனஉறுதி அதிகமாக இருப்பதையும் பார்த்து நான் மகிழ்ச்சியடைகிறேன். இக்கட்டான சூழலில் கூட பாரத் ஜோடோ யாத்திரையில் மக்கள் உற்சாகமாக செயல்படுகின்றனர். இதற்கு சான்றாக காயமடைந்தவர்களுக்கு உடனடியாக உதவிகள் செய்யப்பட்டன. மேலும் அவர்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. இந்தியாவை ஒருங்கிணைக்கும் வகையில் பாதயாத்திரையை நாம் முன்னெடுத்துள்ளோம். இதில் பங்கெடுத்து கடமையை நிறைவேற்றும்போது நாம் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டும் என்பதை இந்த தருணத்தில் கூறி கொள்ள விரும்புகிறேன்” என ராகுல் காந்தி கூறியுள்ளார்.