பிரதமர் மோடி இந்தியாவுக்கு துரோகம் இழைத்துவிட்டார்: சுப்ரமணியன் சுவாமி!

‘காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் பண்டித்கள் கொல்லப்படும் நிலையில் பழிக்குப்பழி வாங்காமல் காஷ்மீரில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியாத சூழலில் கிரிக்கெட் தான் அமித்ஷாவின் மத்திய உள்துறை அமைச்சகமாக உள்ளது’ என சுப்பிரமணியன் சாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் காஷ்மீர் பண்டித்கள் வசித்து வந்தனர். தொடர்ந்து அங்கு பயங்கரவாதம் அதிகரித்த நிலையில் காஷ்மீர் பண்டித்கள் அங்கிருந்து பிற இடங்களுக்கு குடிபெயர்ந்தனர். அதன்பிறகு காஷ்மீர் பண்டித்களின் பாதுகாப்பை உறுதி செய்து மத்திய அரசு அவர்களை காஷ்மீரில் குடியேற வைத்தது. தற்போது அங்கு ஏராளமானவர்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக காஷ்மீர் பண்டித்களை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றனர். அடிக்கடி காஷ்மீர் பண்டித்களை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு முதல் காஷ்மீர் பண்டித்கள் கொலை செய்யப்படுவதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மேலும் பல காஷ்மீர் பண்டித்கள் மீண்டும் காஷ்மீரில் இருந்து பாதுகாப்பு கருதி வெளியேற துவங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் காஷ்மீரின் சோபியான் மாவட்டம் சவுத்ரி குண்ட் பகுதியை சேர்ந்த கிருஷ்ண பட் என்ற காஷ்மீரி பண்டித்தை நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இது அங்குள்ள மக்களிடம் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழல் உள்ளது. அரசு சார்பில் பாதுகாப்பு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் தற்போது சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பாஜகவின் மூத்த தலைவரான சுப்ரமணியன் சுவாமி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

காஷ்மீரி பண்டித் பிகே பட் கோழைத்தனமாகவும், கொடூரமாகவும் தாக்குதல் நடத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். அமித்ஷாவின் காஷ்மீர் பயணம் என்பது வெற்றுத்தனமானது என்பதையே இந்த கொலை காட்டுகிறது. பழிவாங்காமல் காஷ்மீரில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியாது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எம்பிபிஎஸ் படிப்பை இந்தி மொழியில் கற்கலாம் என்பதை உறுதி செய்வதில் மும்முரமாக உள்ளார். அமித்ஷாவின் உள்துறை அமைச்சகம் என்பது கிரிக்கெட் தான்.

லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசத்தை சீனாவின் ஒருபகுதியாக காட்டும் வகையில் சீன மொழியில் அந்த பகுதிகளை குறிப்பிட்டு எஸ்சிஓ மாநாட்டில் சீனா வழங்கி உள்ளது. பிரதமர் மோடி இந்த கூட்டத்துக்கு சென்று இந்தியாவின் தேசநலனுக்கு துரோகம் செய்தார். 1995ம் ஆண்டு பரஸ்பரம் ஒபபுக்கொண்ட எல்லை கட்டுப்பாட்டு கோடுகளை கடந்து டெப்சாங், கல்வான், கைலாஷ் மலைகளின் பெரும் பகுதிகளை சீனா ஆக்கிரமித்து இன்னும் விழி மேல் விழிவைத்து பார்த்து கொண்டிருக்கிறது. ஆனால் மோடி இன்னும் ஒன்றும் நடக்காதது போன்ற மனநிலையிலேயே உள்ளார்.