சென்னையில் வாடகை தாய்களை ஒரு வீட்டில் அடைத்து சிகிச்சை அளிப்பதாக வெளியான தகவலையடுத்து அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.
இயக்குநர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ‘நானும் ரவுடிதான்’ திரைப்படத்தில் நடித்தபோது இருவரும் காதலிக்க தொடங்கினர். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. அவர்கள் திருமணம் நடைபெற்று 4 மாதங்களில் தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் அறிவித்தார். அப்போது பரபரப்பும் சர்ச்சைகளும் அவர்களை சூழ்ந்து கொண்டது. வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதாக தகவல்கள் வெளியான நிலையில் பல்வேறு சட்ட விதிகளை காட்டி கேள்விக் கணைகளும் தொடுக்கப்பட்டது. அதே நேரத்தில் வாடகைத் தாய் குறித்த தேடுதல்களும் கேள்விகளும் பொதுவெளிகளில் அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தலைநகரான சென்னையில் ஒரு வீட்டில் பெண்களை அடைத்து வைத்து வாடகை தாயாக பயன்படுத்தப்படுவதாகவும் அவர்களிடமிருந்து கருமுட்டையும் பெறப்படுவதாக பகீர் புகார் அளித்துள்ளது. சூளைமேடு பகுதியில் தனியார் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை என்ற பெயரில் பிரபல மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையை சேர்ந்தவர்கள் தான் வாடகை தாய்களாக குடும்பப் பெண்களை அந்த வீட்டில் அடைத்து வைத்து சிகிச்சை அளித்து வந்துள்ளனர். அடைத்து வைக்கப்பட்ட பெண்கள் மேலும் தமிழக மட்டுமல்லாது கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் வங்காளதேசம், நைஜீரியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் பணத்தாசை காட்டி அழைத்து வரப்பட்டிருக்கின்றனர். பெரும்பாலும் 25 வயதுக்குட்பட்ட சாதாரண குடும்பப் பெண்களே அங்கு வாடகை தாயர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் பலருக்கு திருமணமே ஆகாத நிலையில் குடும்ப வறுமை காரணமாக பணத்துக்காக இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இதுகுறித்து ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. அதில் வாடகை தாய்மார்களுக்கு உணவு கொடுக்காமல் சித்திரவதை செய்ததோடு அந்த வீட்டை விட்டு அவர்கள் வெளியே வர அனுமதிக்கப்படவில்லை எனவும் மருத்துவர்கள் வீடுகளுக்கு மட்டும் செல்ல அதுவும் இரவு நேரங்களில் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர் என்ற பகிர் தகவல் வெளியானது. இந்த நிலையில் வீட்டில் கோழிகளைப் போல வாடகை தாய்மார்களை அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக குறித்து விசாரணை நடத்தை அறிக்கை அளிக்க தமிழக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விசாரணைக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்ட நிலையில் இந்த விவகார தொடர்பாக குறிப்பிட்ட தனியார் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அதிகாரிகள் சோதனை நடத்தி ஆய்வு மேற்கொண்டனர். மேலும் வாடகை தாய்களாக அடைத்து வைக்கப்பட்டு இருந்த பெண்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது. தமிழக முழுவதும் இந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அதிகாரிகளின் முழுமையான விசாரணைக்கு பிறகு பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.