முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மறைவுக்கு சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. சபாநாயகர் அப்பாவு தலைமையில் சட்டசபை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. வரும் 19ம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டது.
தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா, இங்கிலாந்து ராணி எலிசபெத், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. சபாநாயகர் அப்பாவு இரங்கல் குறிப்பை வாசித்தார். அதன்பின்னர் இன்றைய அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. நாளை காலை 10 மணிக்கு சட்டசபை கூடும் என சபாநாயகர் அறிவித்தார். இதையடுத்து சட்டசபை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சட்டசபைக் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனையின் முடிவில் வரும் 19ம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டது.
பின்னர் அப்பாவு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
எதிர்க்கட்சி துணை தலைவர் குறித்து ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு கடிதம் குறித்து சட்டசபையில் தான் கூற முடியும், பொதுவெளியில் கூற முடியாது. உறுப்பினர் என்ற அடிப்படையில் பன்னீர்செல்வம் அலுவல் கூட்டத்தில் பங்கேற்றார். ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கைகள் நாளை சட்டசபையில் சமர்பிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.