காந்தி குடும்பத்தின் அறிவுரையை கேட்பதில் வெட்கப்பட ஒன்றுமில்லை: மல்லிகார்ஜுன கார்கே

காங்கிரஸ் கட்சியை வழிநடத்துவதற்கு காந்தி குடும்பத்தின் அறிவுரை மற்றும் ஆதரவினை வாங்குவதில் எந்த ஒரு வெட்கமும் இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

இன்று (அக்டோபர் 17) காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:-

சோனியா காந்தி காங்கிரஸ் கட்சிக்காக 20 ஆண்டுகளாக உழைத்துள்ளார். காங்கிரஸினை வலிமை வாய்ந்த கட்சியாக மாற்றியதில் அவர்களின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாதது. ராகுல் காந்தி காங்கிரஸின் தலைவராக இருந்துள்ளார். சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவருமே காங்கிஸினை வலிமையான கட்சியாக மாற்ற கடுமையாக உழைத்துள்ளனர்.

நான் காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் காந்தி குடும்பம் என்ன சொல்கிறதோ அதனைக் கேட்டுதான் இயங்குவேன் என பாஜக பேசி வருகிறது. நேரு-காந்தி குடும்பம் இந்த நாட்டிற்காக பல்வேறு பங்களிப்புகளையும், தியாகங்களையும் செய்துள்ளனர். ஜவஹர்லால் நேரு தொடங்கி இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி பின்னர் சோனியா காந்தி எனப் பலரும் தங்களது கடின உழைப்பை நாட்டு மக்களுக்காக நல்கினர். சில தேர்தல்களில் தோல்வியடைந்தற்காக காங்கிரஸ் குறித்து தவறாக விமர்சிப்பது சரியாகாது. அவர்கள் இந்த நாட்டுக்காக நல்லது செய்துள்ளார்கள். அவர்களது அறிவுரை எப்போதும் கட்சியின் நலன் சார்ந்தே இருக்கும். அதனால், நான் அவர்களது அறிவுரை மற்றும் ஆதரவினை கண்டிப்பாக எதிர்பார்ப்பேன். அதில் வெட்கப்பட ஒன்றும் இல்லை.

உங்களது அறிவுரையில் இருந்து பயனுள்ள விஷயங்கள் நடைபெறுமானால் அதையும் நான் எடுத்துக் கொள்ள தயாராக உள்ளேன். அவர்கள் கட்சிக்காக உழைத்துள்ளார்கள் அவர்களது அறிவுரையை ஏற்று நடப்பது எனது கடமை. சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி இருவருக்கும் நாட்டின் அனைத்துப் பகுதிகள் குறித்தும் நன்கு அறிந்தவர்கள். அவர்களுக்கு யார் கட்சியின் நலன் மற்றும் ஒற்றுமைக்காக உழைப்பார்கள் என தெரியும். நான் அவர்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்வேன்.

வேலையின்மை அதிகரிக்கிறது. உள்நாட்டு உற்பத்தி குறைகிறது. அதனால் பணவீக்கம் ஏற்படுகிறது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றமாக இருந்து வருகிறது.

மதத்தினை வைத்து பாஜக – ஆர்எஸ்எஸ் நாட்டினை பிளவுப்படுத்துகிறது. தாழ்த்தப்பட்ட மக்களையும் பின்தங்கியவர்களையும் பிரிக்கிறார்கள். அவர்கள் எல்லாவற்றையும் தேர்தல் நோக்கத்துடனயே பார்க்கிறார்கள். பாஜக – ஆர்எஸ்எஸ் ஆகியவற்றின் பழிவாங்கும் சிந்தாந்ததோடு போராடுவதும், காங்கிரஸ் அமைப்பினை பலப்படுத்துவதும் எனது பணி. இவ்வாறு அவர் கூறினார்.