பில்கிஸ் பானு குற்றவாளிகளை விடுதலை செய்ய மத்திய அரசு அனுமதி தந்தது: குஜராத் அரசு தகவல்!

நாட்டையே உலுக்கிய பில்கிஸ் பானு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது என உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் குஜராத் அரசு கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2002ஆம் ஆண்டில் குஜராத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்து அமைப்புகளைச் சேர்ந்த 59 பேர் கொல்லப்பட்டதாக தகவல் பரவிய நிலையில் குஜராத்தில் திடீரென கலவரம் வெடித்தது. இந்த தாக்குதலில் ஏராளமான இஸ்லாமியர்கள் தாக்குதலுக்கு உள்ளாகினர். ஏராளமானோர் தங்கள் இருப்பிடங்களில் இருந்து பாதுகாப்புத் தேடி வேறு இடங்களில் தஞ்சம் புகுந்தனர். ஆனால் பலரையும் தேடி தேடி பிடித்து கலவரக்காரர்கள் தாக்கினர். இதனால் அந்தப் பகுதி முழுவதுமே போர்க்களம் போல காட்சி அளித்தது.

அப்போது கலவரம் நடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி பில்கிஸ் பானு என்ற 5 மாத கர்ப்பிணிப் பெண் தனது குடும்பத்துடன் தான் வசித்து வந்த கிராமத்திலிருந்து தப்பிச் சென்றார். சாலையோரம் தங்கியிருந்த அவர்களை ஆயுதம் ஏந்திய கும்பல் தாக்கியதோடு அவரது மகள் உள்ளிட்ட 7 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். கர்ப்பிணி என்றும் பாராமல் பில்கிஸ் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இதை அடுத்து இந்த வழக்கில் கொலை, கூட்டு பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சிறை தண்டனை அனுபவித்து வந்த நிலையில் குற்றவாளிகளில் ஒருவர் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 2008 ஆம் ஆண்டு சிபிஎஸ் சிறப்பு நீதிமன்றத்தால்அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 15 ஆண்டுகளுக்கு மேலாக கோத்ரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அவர்கள் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை ஒட்டி விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் குற்றவாளிகளை விடுதலை செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக குஜராத் அரசு இரண்டு வாரங்களுக்குள் விடுதலை தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது. இநிலையில் உச்சநீதிமன்றத்தில் குஜராத் அரசு இன்று பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தது. அதில் நன்னடத்தை காரணமாக 11 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்ததாக கூறப்பட்டுள்ளது.