இந்திக்கு தாய்ப்பாலும் தமிழ் உட்பட மற்ற மொழிகளுக்கு கள்ளிப்பாலும் கொடுப்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அலுவல் மொழி தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான குழு அளித்த பரிந்துரைகளுக்கு எதிராக தமிழக சட்டசபையில் இந்தி எதிர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதை முன் மொழிந்து பேசிய முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசையும், அமித்ஷாவையும் ஒரு பிடி பிடித்தார். குடியரசுத் தலைவரிடம் அளிக்கப்பட்டுள்ள அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு நடைமுறைப்படுத்தக் கூடாது எனக் கேட்டுக்கொண்டார். மொழிப்போராட்டம் இந்திக்கு எதிரான போராட்டம் வெறும் மொழிப்போராட்டம் மட்டுமல்ல என்று கூறிய ஸ்டாலின் தமிழினத்தையே பாதூகாக்கும் போராட்டம் எனத் தெரிவித்தார்.
ஆட்சி நிர்வாகத்தில் தொடங்கி கல்வி வரை இந்தி திணிப்பு ஒன்றையே மத்திய அரசு நோக்கமாக கொண்டு செயல்படுவதாக சாடினார். பல்வேறு இனம் மதம் மொழி கொண்ட இந்தியாவை மாற்ற முயல்கிறார்கள் என மத்திய அரசு மீது குற்றஞ்சாட்டினார். மேலும், இந்திக்கு தாய்ப்பாலும் தமிழ் உட்பட மற்ற மொழிகளுக்கு கள்ளிப்பாலும் கொடுப்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது எப் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு மொழி ஆதிக்கம் கூடாது என்பதை இதுவரை பிரதமராக இருந்தவர்கள் உணர்ந்து செயல்பட்டார்கள் எனத் தெரிவித்தார்.
நாட்டின் பன்முகத்தன்மைக்கு குந்தகம் விளைவிக்கும் நடவடிக்கைகள் அரங்கேற்றப்படுவதாக மிகுந்த வேதனைத் தெரிவித்தார் ஸ்டாலின். ஆட்சி மொழி தமிழ் உட்பட மாநில மொழிகள் அனைத்தும் இந்தியாவின் ஆட்சி மொழியாக ஏற்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்த முதல்வர் ஸ்டாலின் இந்தி மொழி அடிப்படையில் இந்தியாவை மத்திய அரசு மூன்றாக பிரித்து பார்ப்பதாக தெரிவித்தார். முதல்வர் ஸ்டாலின் முன் மொழிந்த இந்தி எதிர்ப்பு தீர்மானத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி, காங்கிரஸ், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் வழிமொழிந்து வரவேற்றன.