மணீஷ் சிசோடியா குற்றச்சாட்டை மறுத்த சிபிஐ!

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகுமாறு சொன்னதாக, மணீஷ் சிசோடியா குற்றச்சாட்டை சிபிஐ மறுத்துள்ளது. அத்துடன், தொழில்முறை மற்றும் சட்டபூர்வமான முறையிலேயே அவரிடம் சோதனை நடத்தப்பட்டதாக விளக்கமும் சிபிஐ அதிகாரிகள் தந்துள்ளனர்.

டெல்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநில அரசிலும் சரி, கட்சியிலும் சரி, கெஜ்ரிவாலுக்கு அடுத்த முக்கிய இடத்தில், அதாவது துணை முதல்வராக இருப்பவர், மணீஷ் சிசோடியா. கடந்த சில வாரங்களுக்கு முன்பு, டெல்லி மதுபானக் கொள்கை விவகாரம் தொடர்பாக, மணீஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ அதிகாரிகள் திடுதிப்பென்று சோதனை நடத்தினர். அப்போது பல முக்கிய டாக்குமெண்ட்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், இது குறித்து மணீஷ் சிசோடியா ஒரு விளக்கம் தந்தார். பழிவாங்கும் நோக்கத்திலேயே மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது என்றும், சிபிஐ சோதனையில் அப்படி எந்த டாக்குமெண்ட்டும் கைப்பற்றப்படவில்லை என்றார். எனினும், மதுபானக் கொள்கை வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, மணீஷ் சிசோடியாவுக்கு சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பினார்கள். டெல்லியில் உள்ள சிபிஐ ஆபிசில் ஆஜராகும்படி அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, மணீஷ் சிசோடியாவும் நேற்றைய தினம் சிபிஐ ஆபீசில் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் 9 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணைக்கு பிறகு, செய்தியாளர்களிடம் மணீஷ் சிசோடியா கூறியதாவது:-

சிபிஐ ஆபீசில் அதிகாரிகளை சந்தித்தேன். என் மீதான இந்த முழு வழக்கும் போலியானது, பொய்யானது என்பதை என்னிடம் நடத்திய இந்த 9 மணி நேர விசாரணையில் எல்லாத்தையும் புரிந்து கொண்டேன். இந்த கேஸ், என் மீதான எந்த ஊழலையும் விசாரிப்பதற்காக கிடையாது. ஆபரேஷன் தாமரை டெல்லியில் ஆபரேஷன் தாமரையை வெற்றிகரமாக்குவதற்காக மட்டுமே இப்படிப்பட்ட விசாரணை என்னிடம் நடத்தப்பட்டுள்ளது. ஆனால், ஆம் ஆத்மியை விட்டு, பாஜகவுக்கு செல்ல மாட்டேன். முதல்வர் பதவியை தருவதாக சொன்னார்கள். அதையும் மறுத்துவிட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

மணீஷ் சிசோடியாவின் இந்த குற்றச்சாட்டு, தேசிய அரசியலில் பரபரப்பையும் சலசலப்பையும் கூட்டிவிட்டது. காரணம், மாற்று கட்சியில் உள்ளவர்களை, வலைவீசி பிடிப்பது பாஜகவுக்கு கைவந்த கலை என்பதால், இந்த குற்றச்சாட்டை முழுவதும் அரசியல் களத்தில் யாராலுமே நிராகரிக்க முடியவில்லை.. இந்நிலையில், சிபிஐ மணீஷ் சிசோடியோ குற்றச்சாட்டை மறுத்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் சேருமாறு சொல்லவேயில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், இந்த சோதனை தொழில்முறை மற்றும் சட்டபூர்வமான முறையில் நடத்தப்பட்டதுதான் என்றும் சிபிஐ வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு டுவிட் பதிவிட்டுள்ளார். அதில், குஜராத் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் சிசோடியா பங்கெடுப்பதை தடுக்கும் நோக்கத்தில் அவர் கைது செய்யப்படலாம். குஜராத் சட்டப்பேரவை தேர்தல் முடிவு டிசம்பர் 8-ல் வெளியாகிறது. அதுவரை அவரை சிறையில் வைக்க முடிவு செய்துள்ளனர் என்றார்.