ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதியளித்து வழங்கிய உத்தரவை மறு ஆய்வு செய்திடகோரி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தொடர்ந்த வழக்கை நீதிபதி இளந்திரையன் தள்ளுபடி செய்தார்.
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் 2 ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பேரணி நடத்த முடிவு செய்தது. இதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கவில்லை. இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கிடகோரி சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு கடந்த மாதம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து அக்டோபர் 2 ஆம் தேதி தமிழ்நாட்டின் 51 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பு திட்டமிட்டது.
இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்கள் அனுமதி மறுத்தனர். பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட தடை, பெட்ரோல் குண்டுவீச்சு உட்பட பல்வேறு மாவட்டங்களில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி ஆர்.எஸ்.எஸ். ஊரவலகத்துக்கு அனுமதி வழங்க முடியாது என காவல்துறை விளக்கம் அளித்தது.
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதியளித்து பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். நீதிபதி இளந்திரையன் அமர்வு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மத நல்லிணக்கம், சட்டம் – ஒழுங்கு பிரச்னை சம்பந்தப்பட்டுள்ளதால் மறு ஆய்வு கோர உரிமை உள்ளதாக வாதிடப்பட்டது. மேலும், அணிவகுப்புக்கு அனுமதி கோரியது என்பது உரிமையியல் பிரச்சனை எனவும், அதை சம்பந்தப்பட்ட நீதிபதி முன் விசாரணைக்கு பட்டியலிட்டிருக்க வேண்டும் எனவும், மாறாக குற்றவியல் வழக்காக விசாரணைக்கு எடுப்பது உகந்து கிடையாது என்றும், எனவே அந்த வழக்கில் பிறப்பித்த உத்தரவுகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் திருமாவளவன் தரப்பில் வாதிடப்பட்டது.
காவல் கண்காணிப்பாளரையோ, காவல் ஆணையரையோ எதிர்மனுதாரராக சேர்ப்பதால் மட்டும் உரிமையியல் வழக்கை, குற்றவியல் வழக்காக கருத முடியாது எனவும் வாதிடப்பட்டது. இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இந்த நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி இளந்திரையன் திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.