இந்தி திணிப்பை அனுமதிக்க முடியாது: ஓ பன்னீர் செல்வம்!

இந்தி திணிப்பை தமிழகத்தில் அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது. முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த இந்தி எதிர்ப்பு தீர்மானத்துக்கு அதிமுக முழுமனதாக, ஒருமனதாக ஆதரவு அளிக்கிறது என சட்டசபையில் ஓ பன்னீர் செல்வம் பேசினார்.

தமிழக சட்டசபையின் இரண்டாவது நாள் கூட்டம் இன்று தொடங்கியது. கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான குழுவின் இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தை முதல்வர் முக ஸ்டாலின் தாக்கல் செய்தார். இந்த தீர்மானத்தின் மீது எம்எல்ஏக்கள் பேசினார். அதிமுகவின் ஓ பன்னீர் செல்வம் பேசியதாவது:-

வீழ்வது உயிராயினும் வாழ்வது அன்னை தமிழாய் இருந்திட வேண்டும் என்பான் உண்மை தமிழன். இந்த வீர முழக்கத்தை உயிர் மூச்சாய் கொண்டு உருவான போராட்டம் தான் இந்தி எதிர்ப்பு போராட்டம். 1930ல் போராட்டம் துவங்கியது. தந்தை பெரியார், மறைமலை அடிகளார் உள்ளிட்டவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். போராட்டத்தில் பங்கேற்ற நடராஜர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவரது உடல்நலம் குன்றியது. மன்னிப்பு கோரினால் விடுதலை செய்வதாக அரசு கூறியது. அவர் மன்னிப்பு கோராமல் இறந்தார். இதுதான் முதல் மரணம். அதன்பிறகு தாளமுத்து என்பவர் இறந்தார். இந்த எதிர்ப்பின் காரணமாக இந்தி பயிற்று மொழிக்கு எதிரான போராட்டம் அதிகமானது.

1963ல் ஆட்சி மொழி சட்டத்தால் மீண்டும் போராட்டம் உருவானது. அண்ணா முழுமையாக எதிர்த்தார். அரியலூரில் திமுக தொண்டர் சின்னச்சாமி இந்தி திணிப்பை எதிர்த்து திருச்சி ரயில் நிலையத்தின் அருகே தீக்குளித்து மறைந்தார். இந்தி எதிர்ப்புக்காக அனைத்து தரப்பையும் இது எழுச்சியூட்டியது. போராட்டம் எழுச்சியுடன் நடந்தது. ஏராளமானவர்கள் தற்கொலை செய்தனர். தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் இயக்கம் களம் இறங்கியது. போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 100க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச்சூட்டில் உயிர்பலிகள் அதிகரித்தன. போராட்டத்தை ஒடுக்க ராணுவம் வந்தது. 100க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். இந்திக்கு திணிப்பு எதிராக காங்கிரஸில் எதிர்ப்பு கிளம்பியது. இந்தியுடன் ஆங்கிலம் எனும் முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது. அண்ணாவின் தீவிர போராட்டம், மாணவர்களின் போராட்டத்தால் இந்தி திணிப்புக்கு தமிழகம் முற்றுப்புள்ளி வைத்தது.

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் செயல்படுத்திய தமிழ் வளர்ச்சி திட்டங்களை எடுத்து கூறினால் பட்டியல் நீளும். பெரியார், அண்ணா தமிழ் மண்ணில் விதைத்து சென்ற தமிழ் மொழி உணர்வினை எம்ஜிஆர், ஜெயலலிதா வளர்த்துவிட்ட தமிழ்மொழி பெருமையை உயிர்போல் அதிமுக கட்டிக்காக்கும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 8வது அட்டவணயைில் உள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் அலுவலல் மொழியாக்க வேண்டும் என்பதே எங்களின் கொள்கையாகும். அண்ணா வகுத்த தந்த தமிழ், ஆங்கிலம் எனும் இருமொழி கொள்கையையை அதிமுக தொடர்ந்து கடைப்பிடிக்கும். எந்த காலத்திலும் நமது அன்னை தமிழ் மொழியை மீறி தமிழகத்தில் இந்தி திணிப்பை உள்ளே நுழைய அதிமுக அனுமதிக்க மாட்டோம். முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த இந்தி எதிர்ப்புதீர்மானத்தை முழு மனதாக ஏகமனதாக ஆதரிக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.