பில்கிஸ் பானு வழக்கில் முன்கூட்டியே பாலியல் குற்றவாளிகளை குஜராத் அரசு விடுதலை செய்த நிலையில், செங்கோட்டையில் பெண்களை மதிக்க வேண்டும் என பேசுகிறார்கள். ஆனால் உண்மையில் பாலியல் குற்றவாளிகளுக்கு உறுதுணையாக நிற்கிறார்கள் என்று பிரதமர் மோடியை ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த 2002-ஆம் ஆண்டில் குஜராத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்து அமைப்புகளைச் சேர்ந்த 59 பேர் கொல்லப்பட்டதாக தகவல் பரவியது. இதையடுத்து, குஜராத்தில் திடீரென கலவரம் வெடித்தது. இந்த வன்முறையில் ஏராளமான இஸ்லாமியர்கள் தாக்குதலுக்கு உள்ளாகினர். ராந்திக்பூர் என்ற கிராமத்தில் ஒரு வீட்டுக்குள் புகுந்த 12 பேர், அங்கிருந்தவர்களை கொடூரமான முறையில் கொலை செய்து விட்டு 5 மாத கர்ப்பிணி பில்கிஸ் பானுவை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இதை அடுத்து இந்த வழக்கில் கொலை, கூட்டு பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். நாட்டையே உலுக்கிய இந்த கொலை மற்றும் பாலியல் வன்கொடுமையில் தொடர்புடைய குற்றவாளிகள் 11 பேரை ( ஒருவர் இறந்துவிட்டார்) குஜராத் மாநில அரசு கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி விடுதலை செய்தது. நாடு முழுவதும் பெரும் விவாதத்தை இந்த விவகாரம் எழுப்பியது. குற்றவாளிகளை விடுதலை செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்தது.
இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் குஜராத் அரசு நீதிமன்றத்தில் 11 பேர் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக பிரமாணப்பத்திரம் ஒன்றை தாக்கல் செய்தது. அதில் நன்னடத்தை காரணமாக 11 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்ததாக கூறப்பட்டு இருந்தது. பாலியல் வழக்கு குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய மத்திய உள்துறை அமைச்சகமும் அனுமதி அளித்து இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி எம்.பி ராகுல் காந்தியும் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
செங்கோட்டையில் பெண்களை மதிக்க வேண்டும் என பேசுகிறார்கள். உண்மையில் பாலியல் குற்றவாளிகளுக்கு உறுதுணையாக நிற்கிறார்கள். பிரதமர் மோடியின் வாக்குறுதிகளுக்கும் நோக்கத்திற்கும் உள்ள வேறுபாடு தெளிவாக தெரிகிறது. பிரதமர் மோடி பெண்களை ஏமாற்றியுள்ளார். இவ்வாறு அவர் விமர்சித்துள்ளார்.