சட்டசபை நிகழ்வில் இன்று பங்கேற்க எடப்பாடி பழனிசாமி அணி எம்.எல்.ஏ.க்களுக்கு தடை விதித்துள்ளார் சபாநாயகர் அப்பாவு. முதலில் 2 நாட்கள் சட்டசபை நிகழ்ச்சிகளில் பங்கேற்க சபாநாயகர் அப்பாவு தடை விதித்த நிலையில் அவை முன்னவரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன் கோரிக்கையை ஏற்று தடையை ஒரு நாளாக குறைக்கப்பட்டது.
தமிழக சட்டசபை கூட்டத் தொடரின் 2வது நாள் கூட்டம் கூச்சல் குழப்பத்துடன் கடும் அமளி துமளிக்கு மத்தியில் தொடங்கியது. எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் சபாநாயகர் நடுநிலையோடு செயல்படவில்லை எனக் கூறி அதிமுக உறுப்பினர்கள் சட்டசபையில் பெடும் பிரளயத்தையே உண்டு பண்ணிவிட்டனர். ஆனால் எதற்கும் அஞ்சாத சபாநாயகர் அப்பாவு, இருந்தால் இருங்கள் இல்லையென்றால் வெளியேறி விடுங்கள் என அதிமுக உறுப்பினர்களை துணிச்சலுடன் எதிர்கொண்டார். ஒரு கட்டத்தில் அவையின் மையப்பகுதிக்கு அதிமுக உறுப்பினர்கள் வந்ததால் அவர்களை சபை காவலர்களை கொண்டு வெளியேற்ற உத்தரவிட்டார்.
இதனிடையே எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்த பிறகு சபாநாயகர் சில விளக்கங்களை கொடுத்தார். அதில் இந்த இடம் சவுகரியமாக உள்ளது அதை எனக்கு கொடுங்கள் என்று உறுப்பினர்கள் கேட்கலாமே தவிர இவரை இந்த இடத்தில் அமர வைக்கக் கூடாது என தன்னிடம் சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்றார். முந்தைய காலத்தில் திமுகவின் சக்கரபாணி அவர்கள், தலைவர் கலைஞர் அவர்களுக்கு சக்கரநாற்காலியில் வந்து செல்ல இட வசதி செய்து தர அனுமதி கேட்டார். ஆனால் அவர் இருந்த இடமே போதும் என்று அப்போது ஆட்சியாளர்கள் கூறினர். எந்த அளவுக்கு அவர்கள் மனசாட்சி இல்லாமல் நடந்தார்கள் என்பது வரலாறு.
சபையை முழு ஜனநாயகத்தோடு நடத்தி வருவதாக கூறிய சபாநாயகர் அப்பாவு, கடந்த காலங்களை போல் எடுத்தோம் கவிழ்த்தோம் என எந்த முடிவையும் தாம் எடுக்க மாட்டேன் எனவும் கூறினார். இதனிடையே சட்டசபையின் மாண்பை கெடுக்கும் வகையில் செயல்பட்டதாக கூறி எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை நிகழ்வில் 2 நாட்கள் பங்கேற்க தடை விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து அவை முன்னவரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன் கோரிக்கையை ஏற்று 2 நாள் தடையை ஒரு நாளாக குறைத்தார். அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற உத்தரவிட்டது, பேரவைக்கு வர தடை விதித்திருப்பது ஏன் என்பது பற்றியெல்லாம் சட்ட நுணுக்கங்களின் அடிப்படையில் நீண்ட விளக்கத்தை கொடுத்தார்
அவையில் இருந்து வெளியேறிய அதிமுக எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது சபாநாயகர் செயல்பாடுகளை மிகக் கடுமையாக விமர்சித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அரசியல் ரீதியாக அதிமுகவை எதிர்கொள்ளாத திமுக சபாநாயகர் பழிவாங்க நினைக்கிறது. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் நீக்கப்பட்டது செல்லும் என்ற நீதிமன்ற தீர்ப்பை சபாநாயகர் மதிக்கவில்லை. 62 அதிமுக எம்எல்ஏக்களும் எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்பி உதயகுமாரை தேர்ந்தெடுத்துள்ளனர். சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில்தான் முதல்வரோ எதிர்க்கட்சித் தலைவராகவும் முடியும். திமுக அரசு மீது மக்களிடம் எதிர்ப்பு எழுந்துள்ளதால் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானத்தை திமுக கையில் எடுத்துள்ளது. திமுகவின் பீ டீம்மாக பன்னீர்செல்வம் செயல்பட்டு வருகிறார் .
அருணா ஜெகதீசன் ஆணையம், தூத்துக்குடி விசாரணை ஆணையம் ஆகியவற்றை அமைத்ததே நாங்கள்தான் பிறகு ஏன் பயப்பட வேண்டும். ஏக்நாத் ஷிண்டே திமுக தலைவர் ஸ்டாலிடம் ஆலோசனை செய்துதான் சட்டப்பேரவை தலைவர் செயல்படுவதாக நாங்கள் கருதுகிறோம். அரசியல் ரீதியாக அதிமுகவை எதிர்கொள்ளாத திமுக தலைவர் ஸ்டாலின் கொல்லைப்புரம் மூலமாக பழி வாங்குகிறார். திமுக ஆதரவுடன் பன்னீர்செல்வம் முன்கூட்டியே செய்த சதித்திட்டங்கள் அம்பலம் ஆகியுள்ளன. மத்திய பிரதேசத்தில் ஏக்நாத் ஷிண்டே – உத்தவ் தாக்கரே இடையே பிரச்சனை ஏற்பட்டபோது கூட அதிக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு யாருக்கு இருக்கிறதோ அவர்களுக்குத்தான் பதவி வழங்க வேண்டும் என நீதிமன்றமே உத்தரவிட்டிருக்கிறது. ஆனால் தமிழகத்தில் அதை சபாநாயகர் அப்பாவு மீதியுள்ளார். இவ்வாறு அவர் குற்றம் சாட்டினார்.