டாக்டர் கலைஞர் அவர்களின் வழியில் ‘தளபதி’ ஸ்டாலின்: வேல்முருகன்!

இந்த திணிப்பை முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் வழியில் இன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தளபதி அவர்கள் வரலாற்று சிறப்புமிக்க இந்தி தீர்மானத்தை கொண்டு வந்திருப்பதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.

தமிழக சட்டசபையில் மத்திய அரசின் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானத்தை ஆதரித்து பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் பேசியதாவது:-

மத்திய அமைச்சர் தலைமையிலான குழு இந்தியை திணிக்கிறது. உயர்கல்வி நிறுவனங்களிலும் இந்தி திணிக்கப்படுகிறது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் இந்தியை கட்டாயமாக்குகிற நிலைமை இருக்கிறது. இவை அனைத்தும் பல்வேறு மொழி வழி தேசிய இனங்களின் வாழ்வுரிமையை முற்றும் முதலுமாக பறிக்கின்ற ஒரு செயல். இந்திய ஒன்றியம் என்பது பல்வேறு தேசிய இனங்களின், பல்வேறு மொழி வழி பண்பாடு, கலை, கலாச்சாரம், நாகரீகம், தொன்மை, வாழ்வியல், வரலாறு இவற்றை அடங்கிய ஒன்று,. ஆனால் இந்தி திணிப்பு என்பது அனைத்தையும் அழித்து ஒழித்து ஒற்றை இந்தியா, ஒற்றை உணவு, ஒற்றை பண்பாடு, ஒற்றை கலாச்சாரம், ஒற்றைத் தேர்வு, ஒற்றை மொழி, இந்தி மொழி என்கிற இந்த திணிப்பை முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் வழியில் இன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தளபதி அவர்கள் வரலாற்று சிறப்புமிக்க இந்த இந்தி எதிர்ப்பு தீர்மானத்தை இந்திய ஒன்றியத்திற்கு எதிராக ஏனைய மாநிலங்களின் மொழி வழி மாநில உரிமைகளை காக்கின்ற ஒரு அரணாக இன்றைக்கு தமிழக சட்டமன்றத்தில் தமிழக அரசின் சார்பாக இந்தி எதிர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்திருக்கிறார். இந்த தீர்மானத்தை தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பாகவும் உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழர்களின் சார்பாகவும் மனதார நான் வரவேற்கிறேன்.

அதோடு மட்டுமல்லாமல் திணிப்புக்கு குழுவின் பரிந்துரையை அறிவித்ததோடு மட்டுமல்லாமல் இன்றைக்கு ஒன்றிய தலைமை அமைச்சர் அவர்கள் மருத்துவக் கல்வி பயிலகத்திற்கான பாடத்திட்டங்களை நூல்களை இந்தியில் அறிமுகப்படுத்தி இருக்கிறார். அப்படி அறிமுகப்படுத்துகின்ற போது அகில இந்திய ஒதுக்கீட்டில் இருக்கின்ற 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட மருத்துவக் கல்வி இடங்களிலும் பல் மருத்துவக் கல்வி மற்றும் உயர் மருத்துவக் கல்வி இந்தியா முழுக்க இருக்கின்ற ஏனைய மொழி மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் அந்த இந்தியை படிப்பதற்கு வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் அதை அறிவிக்கின்ற இதே நேரத்தில் அகில இந்திய இட ஒதுக்கீட்டில் மொழி வழி மாநில மக்களின் மாணவர்களின் உரிமையை நசுக்குகின்ற இந்தியை படிக்க தெரியாமல் மருத்துவக் கல்லூரியில் நுழைய முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. அதனை ஒன்றிய அரசு கருத்தில் கொள்ளாமல் பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். அந்தப் பாடத்திட்டத்தை ஒன்றிய அரசு மாநில மொழிகளில் பாடத்திட்டத்தை உருவாக்கிவிட்டு கூட இதை செய்திருந்தால் கூட அனைத்து மாநில மக்களுக்கும் தாய் மொழியில் கல்வி பயில்கின்ற உரிமையை தந்துவிட்டு எது செய்திருந்தாலும் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அதை செய்யாமல் கட்டாயமாக இந்தியை புகுத்துவதற்கும் கட்டாயமாக இந்தியை நடைமுறைப்படுத்துவதற்கும் எல்லாவிதத்திலும் இன்றைக்கு இந்தியாவில் இந்தி படிக்கத் தெரிந்தால் இந்தி பேசத் தெரிந்தால் மட்டுமே வாழ முடியும் இந்தியாவில் இருக்க முடியும் என்கிற நிலையை ஒன்றிய தலைமை அமைச்சர் தலைமையிலான இந்த குழு கூறியிருக்கிறது.

பன்முகத் தன்மை கொண்ட ஒரு தேசம், பன்முக மக்கள் வாழும் ஒரு நாடு இந்த இந்தியாவின் இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் ஊறு விளைவிக்கக்கூடிய ஒன்றிய உள்துறை அமைச்சரால் முன்மொழியப்பட்டிருக்கின்ற இந்த தீர்மானத்தை நம்முடைய தமிழக அரசும் தமிழக முதலமைச்சரும் இந்த சட்டப்பேரவையும் எதிர்த்திருப்பதை நான் வரவேற்கிறேன். 22 மாநில மொழிகளை தேசிய மொழிகளாக அட்டவணை எட்டின் கீழ் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற முமொழியப்பட்டிருக்க இந்த தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த தீர்மானத்தை ஆதரித்து கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் பேசுகையில், இத்தனை ஆண்டுகள் கழித்தும் இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டம் நடக்கிறது. எந்த மொழியில் படிக்க வேண்டும் என்பது மாணவர், பெற்றோர் உரிமை ஆகும். கல்வியை பொதுப் பட்டியலில் கொண்டு சென்றதே இந்தி திணிப்புக்குதான் என்பதை நிரூபிக்கின்றனர். மத்திய பிரதேசத்தில் இந்தி மொழியில் மருத்துவ படிப்பு- அகில இந்திய கோட்டாவில் ம.பி.யில் தமிழக மாணவர் படிக்க முடியாது. இருமொழி கொள்கைதான் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு காரணம் என்பதை ஏன் மறுக்கிறார்கள்?: இந்தியா பிரிந்து விடக் கூடாது என்பதற்காக இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார் ஈஸ்வரன்.

இதைத் தொடர்ந்து மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா பேசினார். அவர் பேசுகையில், இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது. ஒரே நாடு, ஒரே மாதம், ஒரே கலாசாரம், ஒரே தேர்தல் என்கிற போக்கில் பாஜக அரசு போகிறது. கொல்கத்தாவில் இந்தி திணிப்புக்கு எதிராக அண்ணா, கருணாநிதி படங்களுடன் பிரம்மாண்ட போராட்டம் நடத்தினர். 1965-ல் இந்தி ஏகாதிபத்தியத்தை அண்ணா, கருணாநிதி தோற்கடித்தனர் என மேற்கு வங்க போராட்டக்காரர்கள் பெருமிதம். ஆங்கிலமும் மாநில மொழிகளும் இந்தியாவின் இணைப்பு மொழிகளாக இருக்க முடியும் என ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.