காஷ்மீரில் கையெறி குண்டு வீச்சில் வெளிமாநில தொழிலாளர்கள் 2 பேர் பலி!

காஷ்மீரில் வெளிமாநில தொழிலாளர்களை குறிவைத்து நள்ளிரவு கையெறி குண்டு வீச்சு தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதில் 2 பேர் பலியாகினர்.

ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, இந்து மதத்தினர் மற்றும் வெளிமாநிலங்களை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் வெளிமாநில தொழிலாளர்களை குறிவைத்து நேற்று நள்ளிரவு கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

சோபியானின் ஹர்மன் பகுதியில் உத்தரபிரதேச மாநிலம் கன்னுஞ் மாவட்டத்தை சேர்ந்த மோனிஷ் குமார் மற்றும் ராம் சாஹர் ஆகிய 2 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் இருவரும் நேற்று நள்ளிரவு உறங்கிக் கொண்டிருந்தனர். அந்த 2 பேரையும் குறிவைத்து பயங்கரவாதி நேற்று இரவு கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தினான். இந்த குண்டு வீச்சு தாக்குதலில் உறங்கிக் கொண்டிருந்த வெளிமாநில தொழிலாளிகள் மோனிஷ், ராம் என 2 பேரும் உயிரிழந்தனர். இந்த குண்டு வீச்சு தாக்குதலைத் தொடர்ந்து சம்பவ இடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தப்பியோடிய பயங்கரவாதியை தேடும் பணியை துரிதப்படுத்தனர்.

இந்த சோதனையில், வெளிமாநில தொழிலாளிகள் மீது கையெறி குண்டு வீசிய லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி இம்ரான் பஷிரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். ஹைபிரிட் பயங்கரவாதிகள் என பட்டியலிப்பட்டுள்ள இந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரின் பயங்கரவாதிகள் பெயர் பட்டியலில் இடம்பெற்றிருப்பதில்லை. அவ்வப்போது, தடயங்கள் எதுவும் இன்றி பயங்கரவாத தாக்குதலை நடத்திவிட்டு மீண்டும் சாதாரண நபர்கள் போல வாழ்க்கை நடத்தும் இந்த ஹைபிரிட் பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.