உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய பயங்கர விபத்தில் சென்னையை சேர்ந்த 3 யாத்ரீகர்கள் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் உள்ள குகைக்கோயில் உலகப் பிரசித்தி பெற்றதாகும். ஆண்டு தோறும் இந்தக் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் வந்து செல்வது வழக்கம். கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கேதார்நாத் கோயிலுக்கு செல்ல யாத்ரீகர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்ததை அடுத்து, நடப்பாண்டு இந்த யாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, ஏராளமான பக்தர்கள் தற்போது இந்த குகைக்கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து திரும்பி வருகின்றனர்.
நடைபயணமாகவும், பேருந்து மார்க்கமாகவும், ஹெலிகாப்டர் மூலமாகவும் கேதார்நாத் கோயிலுக்கு பக்தர்கள் சென்று வருவது வாடிக்கை. அந்த வகையில், கேதார்நாத்துக்கு யாத்திரை வந்த சென்னை அண்ணாநகரை சேர்ந்த பிரேம்குமார், கலா, சுஜாதா உட்பட 6 யாத்ரீகர்கள் ‘ஆர்யன் அவியேஷன்’ நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலமாக நேற்று காலை திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது ‘கருட் சட்டி’ என்ற இடத்துக்கு மேலே பறந்த போது, ஹெலிகாப்டர் திடீரென நிலைத்தடுமாறி அங்கிருந்த மலையின் மீது மோதி கீழே விழுந்து நொறுங்கியது. பின்னர் ஹெலிகாப்டர் முழுவதும் தீப்பற்றியது. இந்த கோர விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 1 விமானி, 6 யாத்ரீகர்கள் என 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த இந்தோ – திபெத் போலீஸார், சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்து உடல்களை மீட்டனர். உயிரிழந்த யாத்ரீகர்களில் சென்னையை சேர்ந்த 3 பேரை தவிர மற்ற மூவரும் குஜராத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
முதல்கட்ட விசாரணையில், பனிமூட்டம் உட்பட மோசமான வானிலையே காரணமாகவே ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியிருக்கலாம் என தெரியவந்துள்ளதாக இந்தோ திபெத் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், இந்த விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மீட்புப் பணிகள் விரைவாக நடைபெறுவதாகவும், உயிரிழந்த யாத்ரீகர்கள் அடையாளம் காணப்பட்ட பின்னர், அவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
இன்று(நேற்று) உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர்கள் உயிரிழந்தனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கலா ரமேஷ், பிரேம்குமார் வாஞ்சிநாதன், சுஜாதா பிரேம்குமார் ஆகிய மூவரும் கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய இடங்களுக்கு புனித யாத்திரை சென்றபோது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கின்றேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை சென்னைக்கு விரைந்து கொண்டு வருவதற்கான முன்னெடுப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு உத்தரகாண்ட் மாநில அரசுடன் இணைந்து மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.