தடையை மீறி போராட்டம் நடத்திய எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டனர்.
சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவராக ஓ.பன்னீர் செல்வத்துக்கு பதிலாக ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு அதிமுக எம் எல் ஏக்கள் கையெழுத்திட்டு சபாநாயகருக்கு கடிதம் வழங்கினர். நேரிலும் இது தொடர்பாக வலியுறுத்தினர். அதற்கு சபாநாயகரோ எதிர்கட்சித் தலைவர் பதவி மட்டுமே அதிகாரபூர்வ பதவி. சட்டமன்றத்தில் ஒருவருடைய இருக்கையை மாற்றுங்கள் என சபாநாயகரை யாரும் வற்புறுத்த கூடாது, வற்புறுத்தவும் முடியாது. தனிப்பட்ட யாருக்காவும் நான் சபாநாயகர் பதவியில் உட்கார்ந்திருக்கவில்லை என்று சபாநாயகர் அப்பாவு பதிலளித்தார். இதனால், சபாநாயகரின் நடவடிக்கையை கண்டித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த போராட்டத்திற்கு சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று காவல் துறை அனுமதியளிக்கவில்லை.
இந்நிலையில், காவல் துறை அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி போராட்டம் நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள், கருப்பு சட்டை அணிந்து சபாநாயகருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “ஸ்டாலின் பேச்சைக் கேட்டுக்கொண்டு சபாநாயகர் செயல்படுகிறார். ஓ.பி.எஸ் அவர்களை பி டீமாக வைத்து அதிமுகவை கட்டுப்படுத்த முக ஸ்டாலின் முயற்சிக்கிறார். ஸ்டாலின்- ஓ.பி.எஸ் நேற்று அரை மணி நேரம் சந்தித்து ஆலோசித்துள்ளனர்” என்று கூறினார்.
போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீஸார் கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றனர். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் கைது செய்யப்பட்டவர்கள் வைக்கப்பட்டுள்ளனர்.