உலகளாவிய மனித உரிமைகளை வடிவமைக்கும் பொறுப்பு இந்தியாவுக்கு இருக்கிறது என, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்து உள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் இந்தியாவுக்கு வந்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அவர் அஞ்சலி செலுத்தினார். தாக்குதல் நடந்த தாஜ் ஓட்டலுக்கு சென்றும் அவர் மரியாதை செய்தார். பிறகு காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர், மும்பை ஐஐடியில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் பேசியதாவது:-
இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை உங்களுடன் இணைந்து கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த 75 ஆண்டுகளில் இந்தியாவின் சாதனைக்கும், பெரிய ஜனநாயக நாடாக திகழ்வதற்கும் இந்தியாவுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது, மிகவும் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா உள்ளது. உலக மக்கள் தொகையில் 6ல் ஒரு பங்கினர் வசிக்கும் நாடாகவும், உலகின் அதிகளவு இளைஞர்கள் கொண்ட நாடாகவும் உள்ள இந்தியா 2030 ஆம் ஆண்டில் இலக்குகளை தாண்டி, ஆக்கத்தக்க வளர்ச்சி இலக்குகளை கொண்டிருக்கும்.
கோவிட் பெருந்தொற்று உச்சத்தில் இருந்த போது, நீங்கள் வழங்கிய மருந்துகள், உபகரணங்கள் மற்றும் தடுப்பூசிகள் முதல், ஆப்கன் மற்றும் இலங்கைக்கு வழங்கிய மனிதநேய உதவி, நிதியுதவி மூலம், சர்வதேச அளவில், உங்களின் தாக்கத்தை அதிகரித்து செல்கிறீர்கள். இன்று ஐநாவின் முக்கிய பங்காளியாக இந்தியா உள்ளது. மனித உரிமைகள் கவுன்சிலின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக உள்ள இந்தியாவுக்கு, உலகளாவிய மனித உரிமைகளை வடிவமைக்கும் பொறுப்பும், சிறுபான்மை சமூகங்கள் உட்பட அனைத்து தனிநபர்களின் உரிமைகளைப் பாதுகாத்து மேம்படுத்தும் பொறுப்பும் இருக்கிறது.
பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆகியோரின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் நீதித் துறையின் தொடர்ச்சியான சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டும். உலகம் முழுவதும் உள்ளதைப் போலவே, இந்தியாவிலும், பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் உரிமைகளை முன்னேற்ற இன்னும் நிறைய செய்ய வேண்டும். இது ஒரு தார்மீக கட்டாயமாகும். சம உரிமைகள் இல்லாமல் எந்த சமூகமும் அதன் முழு திறனை அடைய முடியாது. இவ்வாறு அன்டோனியோ குட்டரெஸ் கூறினார்.