பீகாரில் 7 ம் வகுப்பு தேர்வில், ஜம்மு காஷ்மீர் தனி நாடு என குறிப்பிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பீகாரில் 1ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை பருவ தேர்வுகளை மாநில கல்வி வாரியம் நடத்தியது. அதில் 7 ம் வகுப்பு தேர்வில், கீழ்கண்ட நாடுகளின் மக்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறார்கள் என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது. உதாரணமாக சீனாவில் வசிப்பவர்கள் சீனர்கள் என்றால், நேபாளம், இங்கிலாந்து, காஷ்மீர் மற்றும் இந்தியாவில் வசிக்கும் மக்கள் எவ்வாறு அழைக்கப்படுவார்கள் எனக்கூறப்பட்டிருந்தது. இது தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து பள்ளியின் ஒன்றின் தலைமை ஆசிரியர் கூறுகையில், இந்த கேள்வித்தாள் பீகார் கல்வி வாரியத்தின் மூலமாக பெறப்பட்டது. காஷ்மீர் மக்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறார்கள் என்று கேட்கப்பட்டிருக்க வேண்டும். தவறுதலாக காஷ்மீர் நாட்டு மக்கள் என்று கேட்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க மனித தவறு. இவ்வாறு அவர் கூறினார். இது குறித்து பதிலளிக்க மாவட்ட கல்வி அதிகாரி மறுத்துவிட்டார்.
அதே நேரத்தில், கல்வியாளர்கள் மற்றும் பா.ஜ., தலைவர்கள் அதில் சதி உள்ளது என்றும், இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர். மாநில பா.ஜ., தலைவர் சஞ்சய் ஜெயிஸ்வால் கூறுகையில், இந்த விவகாரத்தில் பீகார் அரசு மவுனமாக உள்ளது. அவர்கள் காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்தபகுதி அல்ல என நினைக்கிறார்கள். நேபாளம், இங்கிலாந்து, சீனா, இந்தியா போன்று, காஷ்மீரும் தனி நாடு என்று பீகார் அதிகாரிகள் நினைக்கின்றனர். ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார், பிரதமராக வேண்டும் என ஓய்வு இல்லாமல் உழைத்து வருவதால், மாணவர்கள் மத்தியில் தேச விரோத சிந்தனை புகுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.