சென்னையில் இருந்து பரந்தூர் விமான நிலையம் 60 கி.மீ. தள்ளி அமைக்கப்படுவதற்கான காரணம் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.
சட்டசபையில் பரந்தூர் விமான நிலையம் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது பேசிய பாமக சட்டமன்றக் குழு தலைவர் ஜிகே மணி, விவசாயிகள் நலனில் அக்கறை கொண்டு விமான நிலையத்தை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தொடர்ந்து, சிபிஐ கட்சியின் நாகை மாலி பேசுகையில், பரந்தூரில் விமான நிலையம் அமைந்தால் சுற்று வட்டார கிராமங்கள் பாதிக்கப்படக் கூடும் என்று தெரிவித்தார். பின்னர் தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகன் பேசுகையில், பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:-
30 ஆண்டுக்கான தேவையை இப்போது நாம் கட்டமைக்க வேண்டியது அவசியம். சரக்குகளை கையாளும் திறனில் சென்னை விமான நிலையம் 7% வளர்ச்சி பெற்றுள்ளது. அண்டை மாநிலங்களில் புதிய விமான நிலையம் இருப்பதால்தான் வளர்ச்சி பெற்று வருகின்றன. சென்னை விமான நிலையம் நாட்டிலேயே 3ம் இடத்தில் இருந்தது. தற்போது பயணிகளை கையாளுவதில் 5ம் இடத்தில் உள்ளது. தற்போது உள்ள விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதில் சிக்கல் இருப்பதால், புதிய விமான நிலையம் அமைப்பது அவசியம்.
அதேபோல் பரந்தூர் விமான நிலையம் சென்னையில் இருந்து 60 கி.மீ. தள்ளி வருவதற்கான காரணம், இந்தியாவில் பல மாநிலங்களில் உள்ள விமான நிலையங்கள் நகரங்களில் இருந்து தொலைவில் தான் இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் விளை நிலங்களாக இருப்பதால் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பரந்தூரை 11 இடங்களை ஆய்வு செய்த பின்னரே தேர்வு செய்தோம். அதற்கு பரந்தூரின் புவியியல் அமைப்பு, நிலப்பரப்பு சூழலை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்பட்டது. இதுதொடர்பான கருத்துக் கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற 13 கிராம மக்கள் தங்கள் கோரிக்கைகளை முன் வைத்தனர். அவர்களின் கருத்துகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவிக்கப்பட்டது. அதற்கு முதலமைச்சர், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.