பாசிசத்திற்கு எதிராக ஒற்றுமையோடு போராட வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே!

பாசிச மற்றும் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக அனைவரும் ஒற்றுமையோடு இணைந்து போராட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நேற்று முன் தினம் நடைபெற்றது. தேர்தலில் கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர் ஆகிய இருவரும் போட்டியிட்டனர். காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் 9,915 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், 9,497 பேர் வாக்களித்தனர். அனைத்து மாநிலங்களிலும் பதிவான வாக்குகள், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. தேர்தலில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறுபவர் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று காலை வாக்குப் பெட்டிகளின் சீல்கள் அகற்றப்பட்டு வாக்குகள் எண்ணிக்கை தொடங்கி நடைபெற்றது. அதில், 7897 வாக்குள் பெற்று மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றுள்ளார். 1000 வாக்குகள் மட்டும் பெற்று சசி தரூர் தோல்வியடைந்துள்ளார். இதன் மூலம், 24 ஆண்டுகளில் முதல்முறையாக காந்தி குடும்பத்தைச் சேராத ஒருவர் காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம், சோனியா காந்தியின் இடைக்கால தலைவர் பொறுப்பு நீக்கப்பட்டு, மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் கட்சியின் தலைவராகவுள்ளார். அவரிடம் அனைத்து பொறுப்புகளும் ஒப்படைக்கப்படவுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததில் இருந்து அக்கட்சியின் தலைவர் பதவி காலியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அக்டோபர் 26ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் தலைவராக அவர் பொறுப்பேற்றுக்கொள்வார் எனவும் காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மல்லிகார்ஜுன கார்கே முதல்முறையாக செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

கடந்த 24 ஆண்டுகளாக சோனியா காந்தி கட்சியை வலுப்படுத்தினார். கட்சிக்காக தனது வாழ்க்கை அர்ப்பணித்துக் கொண்டார். சோனியா காந்தி தலைமையின் கீழ் இரண்டு முறை மத்தியில் ஆட்சி அமைத்துள்ளோம். கட்சி தொண்டர்கள் சார்பில் சோனியா காந்திக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடன் போட்டியிட்ட சசிதரூருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். அவரை நான் நேரில் சென்று சந்தித்தேன். கட்சியை வலுப்படுத்துவது, முன்னேற்றப்பாதையில் எடுத்துச்செல்வது குறித்து அவருடன் விவாதித்தேன்.

காங்கிரஸ் கட்சியில் பெரியவர், சிறியவர் என்ற பாகுபாடு இல்லை. அனைவரும் தொண்டர்களாக இணைந்து கட்சிக்காக உழைக்க வேண்டும். ஜனநாயக சக்திக்கு எதிரான பாசிச மற்றும் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக ஒற்றுமையோடு போராட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.