மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்க்க பிரதமர் மோடி ஏன் வரவில்லை: செல்வப்பெருந்தகை!

75 நாட்கள் மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதாவை பார்க்க பிரதமர் மோடி ஏன் வரவில்லை என காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் செல்வப்பெருந்தகை வினவியுள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் செல்வப்பெருந்தகை கூறியிருப்பதாவது:-

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக என்ற தமிழகத்தின் பிரதான கட்சியின் தலைவர் ஜெயலலிதா, முதல்வராக இருந்தவர். அவருக்கே முறைப்படி சிகிச்சை அளிக்கப்படவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது. பிரதமர் நரேந்திர மோடிக்கும், ஜெயலலிதாவுக்கும் நெருங்கிய நட்பு உண்டு. மோடி குஜராத் முதல்வராக பதவியேற்ற நிகழ்ச்சியில் மூன்று முறை நேரில் பங்கேற்றவர். 2011-ல் ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றபோது, குஜராத் முதல்வராக இருந்தபோது மோடி வந்திருந்தார். குஜராத் முதல்வராக இருந்தபோதும், பிரதமராக இருந்தபோதும் மோடிக்கு தனது போயஸ் தோட்ட இல்லத்தில் விருந்தளித்தவர் ஜெயலலிதா. ஆனாலும், அவர் 75 நாட்கள் மருத்துவமனையில், எப்படி இருக்கிறார் என்பது தெரியாத நிலையில் சிகிச்சை பெற்றபோதும் பிரதமர் மோடி நேரில் வந்து பார்க்கவில்லை

அரசியல் ரீதியாக அ.தி.மு.க.வுக்கு நேர் எதிரணியில் இருந்தாலும், ராகுல் காந்தி நேரில் வந்து உடல்நலம் விசாரித்துச் சென்றார். தனது நீண்டகால நெருங்கிய நண்பரான ஜெயலலிதாவை, சக்தி வாய்ந்த பிரதமர் பதவியில் உள்ள மோடி நேரில் வந்து பார்த்து, அவரது உடல்நலம் குறித்தும், அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மக்களுக்கு உண்மைகளை தெரிவித்திருந்தால், இன்றைய சிக்கல்களே எழுந்திருக்காது. எம்.ஜி.ஆர்., மருத்துவமனையில் இருந்தபோது, அன்றைய பிரதமர் இந்திரா காந்தி நேரில் வந்து நலம் விசாரித்தார். அவரது முயற்சியாலேயே எம்.ஜி.ஆர். சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் செல்லப்பட்டார். அதுபோல, பிரதமர் மோடி, ஜெயலலிதாவை நேரில் வந்து பார்த்திருந்தால், சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருக்க வாய்ப்புள்ளது. இதுபோன்ற சந்தேகங்கள் தற்போது தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கு பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.