திமுக அரசைக் கண்டித்து அக்டோபா் 27ல் பாஜக சாா்பில் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மாநில தலைவா் அண்ணாமலை அறிவித்துள்ளாா்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு, மத்தியப் பல்கலைக்கழகங்கள் உட்பட அனைத்து தொழில்நுட்ப அல்லது தொழில்நுட்பம் அல்லாத கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழி கட்டாயமாக இந்தியாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
இதற்கு திமுக தரப்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்தி திணிப்பு மற்றும் ஒரே பொது நுழைவுத் தேர்வு திட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி திமுக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில்,தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு பாஜக தரப்பில் கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டன. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இந்தியை எதிர்க்கும் உதயநிதி ஸ்டாலின், இந்தி படங்களை வாங்கி தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்வது ஏன் என்று காட்டமாக கேள்வி எழுப்பியதோடு, திமுகவினர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இந்த நிலையில் வரும் அக்டோபர் 27ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் பாஜக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில், தாய்மொழியாம் தமிழுக்கு முடிவுரை எழுத முயற்சிக்கும் திமுக அரசைக் கண்டித்து கண்டன ஆா்ப்பாட்டம் அக்டோபா் 27-இல் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும். திமுகவின் கபட நாடகங்களை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவோம் என்று கூறியுள்ளாா்.