காங்கிரஸ் கட்சி தலித் தலைவர்களை பலிகடாவாக பயன்படுத்துவதாக உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் பெரும்பாலான வாக்குகள் பெற்று மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். அதேசமயம் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இந்தத் தேர்தலை விமர்சித்து கருத்து வெளியிட்டுள்ளன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தலித் தலைவர்களை பலி ஆடுகளாக பயன்படுத்துவதாக உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக மாயாவதி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
பாபாசாகேப் அம்பேத்கரையும் அவரது சமூகத்தின் பங்களிப்பையும் மதிக்காமல் தொடர்ந்து தவிர்த்து வந்ததை காங்கிரஸ் கட்சியின் வரலாறே நமக்கு சாட்சியாக தெரிவிக்கிறது. காங்கிரஸ் கட்சி அதன் வெற்றிகரமான காலங்களில் தலித் மக்களின் பாதுகாப்பையும், அவர்களுக்கான மரியாதையையும் குறித்து கவலை கொண்டதில்லை. மாறாக அதன் மோசமான நாள்களில் தலித் மக்களை பலி ஆடுகளாகப் பயன்படுத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சி தனக்கு சாதகமான காலங்களில் தலித் அல்லாதவர்களை முன்னிறுத்தியும், மோசமான காலங்களில் தலித் மக்களை முன்னிறுத்தியும் அரசியல் செய்கிறது. உண்மையாலும் இது தலித் மக்களின் மீதான பாசம்தானா? என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.