அனுமதி இல்லாமல் தர்ணா: ஜி.கே.வாசன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

அனுமதி இல்லாமல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதற்காக, ஜி.கே.வாசன் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக தலைமை பதவியை குறிவைத்து எடப்பாடி பழனிசாமி காய் நகர்த்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை எடப்பாடி பழனிச்சாமி தனதாக்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவில் இருந்தே நீக்கப்பட்டனர். இதை எதிர்த்து, ஓ.பன்னீர்செல்வம் நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்துள்ளார். இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு முடிவு கட்ட நினைத்த எடப்பாடி பழனிசாமி திட்டத்துக்கு உச்சநீதிமன்றம் தடை போட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்த எடப்பாடி பழனிச்சாமி தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி துணை தலைவராக இருந்த ஓபிஎஸ்சை நீக்கிவிட்டு ஆர்.பி உதயகுமாரை நியமனம் செய்தார். இதுதொடர்பாக சட்டபேரவை சபாநாயகருக்கு கடிதம் அனுப்பி வைத்துவிட்டு அதன் முடிவுக்காக காத்திருந்தனர். ஆனால் சபாநாயகர் எந்த முடிவையும் இன்னும் அறிவிக்கவில்லை. இதனால் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி விவகாரத்தில் சபாநாயகர் என்ன முடிவு எடுப்பார்? என்ற எதிர்பார்ப்பில் ஒரு புறம் எடப்பாடி பழனிச்சாமி தரப்பும், மறுபுறம் ஓபிஎஸ் தரப்பும் இருந்தனர்.

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் கடந்த திங்கள் கிழமை தொடங்கியது.
முன்னதாக சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் மற்றும் எம்எல்ஏக்களின் இருக்கைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என்ற தகவல் வெளியானது. இதன் தொடர்ச்சியாக சட்டப்பேரவை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை. 2வது நாள் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை குறித்து பேச முயன்றார். அதற்கு சபாநாயகர் அனுமதி தராததால், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அதிமுக எம்எல்ஏக்களை வெளியேற்ற அவை காவலர்களுக்கு சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.

இந்நிலையில் எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயக்குமாரை அங்கீகரிக்காததை கண்டித்து அதிமுக எம்எல்ஏக்கள் அடையாள உண்ணாவிரத போராட்டம் அறிவித்தனர். இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்திருந்த நிலையில் அதையும் மீறி எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவினர் கருப்பு சட்டை அணிந்தபடி உண்ணாவிரதம் இருக்க முயன்றனர். இதையடுத்து போலீசார் விரைந்து வந்து எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை கைது செய்து எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் மாலை வரை அடைத்து வைத்தனர்.

இந்த சூழலில் ராஜரத்தினம் மைதானத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த எடப்பாடி பழனிசாமியை சந்திக்க, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வந்தார். ஆனால் அவரை உள்ளே செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் போலீசாருக்கும், ஜி.கே.வாசன் தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரம் அடைந்த ஜி.கே.வாசன் திடீரென சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் அனுமதி இல்லாமல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதற்காக, ஜி.கே.வாசன் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக அரசு அடக்குமுறையில் ஈடுபடுவதாகவும், சட்டப்பேரவையிலும் வெளியிலும் நடப்பதை மக்கள் பார்த்து வருவதாகவும் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்து இருந்த நிலையில் திடீரென வழக்கு பாய்ந்துள்ளது.