தனக்கு இருக்கும் நெருக்கடிகளை மறைக்கவே உண்ணாவிரதப் போராட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஈடுபடுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவருக்கு இருக்கை ஒதுக்குவதில் மாநில அரசின் கையாண்ட முறையை கண்டித்து அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவின் உண்மைத்தன்மையை அறிய அதிமுகவினர் போட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. 2018 மே திங்களில் நடைபெற்ற தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் பலியாகிய சம்பவம் குறித்த விசாரணை ஆணையத்தை அதிமுக அரசு அமைத்தது. அந்த ஆணையத்தின் அறிக்கையும் நேற்று சட்டப்பேரவையில் வைக்கப்பட்டது. இவ்விரு அறிக்கைகளிலும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அவரது தரப்பினரும் இழைத்திருக்கிற குற்றங்களும், அதுதொடர்பான புகார்களையும் நேரிடையாக சந்திக்காமல் சட்டப்பேரவையில் கலவரத்தை ஏற்படுத்தினார்.
சட்டப்பேரவை கேள்வி நேரத்தில் பேரவைத் தலைவரின் இருக்கையின்முன் அமர்ந்து முழக்கம் எழுப்பி கலவரத்தை ஏற்படுத்தினார். பேரவைத் தலைவர் அவருக்கு வாய்ப்பளிக்க முயன்றும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் கூச்சல் குழப்பம் ஏற்படுத்தி விரும்பத்தகாத நிகழ்வை ஏற்படுத்தினர். இதனால் அவர்களை வெளியேற்றுவதற்கு பேரவைத் தலைவர் உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி இந்த அரசு குறித்தும், பேரவைத் தலைவரின் செயல்பாடு குறித்தும் பல்வேறு கருத்துக்களை எடுத்துக் கூறியிருக்கிறார். அவர் இருக்கைக்கு பக்கத்தில் ஓ.பன்னீர்செல்வம் உடன் உட்காருவதை அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பு மட்டுமே சாத்தியமானது, துணைத்தலைவர் பொறுப்பெல்லாம் அதிகாரப்பூர்வமற்றவை என்பதையெல்லாம் பேரவைத் தலைவர் எடுத்துச் சொன்னதற்குப் பிறகும்கூட அவர்மீது எடப்பாடி பழனிசாமி குற்றம் சுமத்தியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவை நடைபெறும் நேரத்தில் போராட்டத்திற்கு அனுமதி கிடைக்காது என்கிற தகவல் தெரிந்திருந்தும்கூட சட்டப்பேரவைக்கு வராமல் சட்டம் ஒழுங்கு சீர்குலைவிற்கு வழிவகுத்துள்ளார். அவர் முதல்வராக இருந்தபோது சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு எடுத்துக்காட்டாக கொடநாடு கொலை, சாத்தான்குளம் படுகொலை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு போன்றவற்றை பட்டியலிடலாம். ஆனால் அவர் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என விமர்சிக்கிறார். இதன்மூலம் அவரின் செயல் தனக்கு உண்டான நெருக்கடிகளை மறைக்கவும், தனது கட்சியின் பிரச்னைகளை மூடி மறைப்பதற்கும் அவர் கையாளும் வழிமுறையாகவே கருதப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.