இலங்கையில் கடந்த 2011-இல் உள்ளூர் போரின்போது இரு மனித உரிமை ஆர்வலர்கள் காணாமல் போன வழக்கில் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபட்ச நீதின்றத்தில் நேரில் ஆஜராக அவருக்கு சம்மன் அனுப்ப அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2011-இல் மகிந்த ராஜபட்ச அதிபராக இருந்தபோது பாதுகாப்புத் துறை அமைச்சராக கோத்தபய ராஜபட்ச இருந்தார். அப்போது நிகழ்ந்த உள்நாட்டுப் போரின் முடிவில் மனித உரிமை ஆர்வலர்கள் பலர் காணாமல் போயினர். கிளர்ச்சியாளர்கள், முக்கிய பத்திரிகையாளர்கள், தன்னார்வலர்கள் விரட்டி அடிக்கப்பட்டனர். அப்போது காணாமல் போன பலரை அதன்பின் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த சம்பவங்களில் கோத்தபய ராஜபட்சவுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. எனினும் அவர் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து வந்தார்.
போரின்போது யாழ்ப்பாணத்தின் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் லலிதா வீரராஜ், குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் போயினர். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபட்ச, டிச. 15-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.