கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்!

கோடியக்கரை அருகே நடுக் கடலில் 10 மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் மீனவர் ஒருவர் காலில் குண்டு துளைத்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

காரைக்காலில் இருந்து கடந்த 15 ஆம் தேதி ஒரு படகில் 10 மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இன்று (அக். 21) நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது ஹெலிகாப்டரில் வந்த கடற்படையினர் படகை நிறுத்த அறிவுறுத்தினர். ஆனால், படகு நிற்காமல் சென்றதால், மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில், 10 மீனவர்கள் காயமடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து விமானப்படையினர், ராமநாதபுரம் அருகே உச்சிப்புளியில் கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ் பருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்று காயத்துடன் இருந்த 10 மீனவர்களை அழைத்து வந்து முதலுதவி அளித்துள்ளனர். இதில், மயிலாடுதுறை மாவட்டம், மாணகிரி பகுதியைச் சேர்ந்த மீனவர் வீரவேல் காலில் குண்டு இருந்ததால் கடற்படையினர் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் உயிருக்கு ஆபத்து இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், சிறிய காயமடைந்த 9 மீனவர்கள் கடற்படை முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழக மீனவர்கள் நடுக்கடலில் விசைப்படகில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இந்திய கடலோர காவல்படையினர் மீனவர்கள் விசைப்படகை நிறுத்தச் சொல்லி சிக்னல் காட்டியதாக கூறப்படுகிறது அப்போது படகு நிற்காமல் சென்றதால் சந்தேகம் அடைந்த கடலோர காவல்படையினர் படகை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் மயிலாடுதுறையைச் சேர்ந்த மீனவர் வீரவேல் என்பவர் படுகாயமடைந்தார். இதையடுத்து இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் காயமடைந்த மீனவர் மீட்கப்பட்டு இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை மற்றும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மீனவர்களிடம் நடத்திய விசாரணையில் இருட்டாக இருந்ததால் சிக்னலை கவனிக்காமல் சென்றதாக தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட மீனவர் வீரவேல் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.