தமிழக அரசுக்கு எதிராக மக்கள் அதிருப்தியில் உள்ளனர்: ஜி.கே.வாசன்

தமிழக அரசுக்கு எதிராக மக்கள் அதிருப்தியில் உள்ளனர் என்று, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

ஈரோடு டோனி பிரிட்ஜ் பாலம் அருகே வெள்ளம் பாதித்த பகுதிகளை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று நேரில் பார்வையிட்டார். பின்னர் கட்சி நிர்வாகிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி வைத்த நியாயமான கோரிக்கையை நிறைவேற்றாமல் தமிழக அரசு காலம் தாழ்த்த நினைத்தது. இதன்மூலம் எதிர்க்கட்சிகளின் குரல்வளை மற்றும் உரிமைகளை பறிக்க பார்க்கிறது. இதைக் கண்டித்து அமைதியான முறையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுவதை தடுத்து கைது செய்தனர். எடப்பாடி பழனிசாமியை சந்திக்க சென்ற என்னையும் தடுத்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கான உண்மை மறுநாள் தான் எனக்கு தெரியவந்தது. அரசுக்கு எதிராக மக்கள் அதிருப்தியில் உள்ளனர். எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு ஆதரவு பெருகி வருகிறது. இதன் காரணமான ஏற்பட்ட அச்சத்தால் தான் அரசு எதிர்க்கட்சிகளை முடக்க நினைக்கிறது. எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தகுந்த நேரத்தில் பாடம் புகட்டுவார்கள்.

எல்லா மாநிலங்களிலும் அவர்களது தாய்மொழி அவர்களுக்கு முக்கியம் தான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. இணைப்பு மொழியாக ஆங்கிலம் உள்ளது. 3வது மொழியை யார் வேண்டுமானாலும் எந்த மொழியையும் கற்கலாம். இதில் கட்டுப்பாடாது கிடையாது.

இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். இது தொடரக் கூடாது. ஆக்கப்பூர்வமான முடிவை மத்திய அரசு எடுக்க வேண்டும். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து முதன்முதலில் வருத்தம் தெரிவித்தவர் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான். இந்த சம்பவத்தில் உண்மை நிலையை வெளியே கொண்டு வர எடப்பாடி பழனிசாமி தான் ஆணையத்தை அமைத்தார். அதே நேரத்தில் காவல்துறை அதிகாரிகள் யார் யார் சரிவர செயல்படவில்லை? என்பதை வெளிப்படுத்துவதற்காக இந்த ஆணையம் அமைக்கப்பட்டது. தற்போது இந்த ஆணை வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் உண்மை நிலை தெரியவந்துள்ளது. ஆறுமுகசாமி ஆணையம் 5 ஆண்டுகளாக விசாரணை நடத்தி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதில் பொதுமக்களுக்கு எந்தவொரு தெளிவும் ஏற்படவில்லை. மாறாக நடுநிலையாளர்கள் தான் இந்த அறிக்கையை சரி, தவறு என விமர்சித்து வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த மக்களுக்கு தேவையான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் ஆறுகளை தூர்வாரும் ஆக்கப்பூர்வான பணிகளை தொடங்க வேண்டும். சம்பா பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காலம் தாழ்த்தாமல் நிவாரணம் வழங்க வேண்டும். காமராஜர் ஆட்சி காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு, தற்போது கிடப்பில் உள்ள ராசி மணல் நீர்த்தேக்க திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.