சில கட்சிகள் ஜாதி, மதம், மொழி, இனத்தை வைத்து மக்களை பிரிக்கிறது: அன்புமணி

தமிழகத்தில் தற்போது மக்களை பிரிக்கின்ற சூழல் இருக்கிறது. நாங்கள் மக்களை சேர்ப்போம். பிரிக்கமாட்டோம் எனவும், சில கட்சிகள் ஜாதி, மதம், மொழி, இனத்தை வைத்து மக்களை பிரிக்கிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

தமிழ்நாடு மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவது நமது கடமை. உங்களுக்கு என்ன தேவை என்பது உங்களுக்கே தெரியவில்லை. இந்தியா ஜனநாயக நாடு. உங்களுக்கு நல்லது செய்பவர்களை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். அந்த விழிப்புணர்வு உங்களுக்கு வேண்டும். இவ்வுளவு காலமாக சின்னத்தை பார்த்து நாம் வாக்களிக்கிறோம். நல்ல தலைவர்கள், திட்டங்களை பார்த்து நாம் வாக்களிப்பது இல்லை. சமீப காலமாக பணத்தை பார்த்து வாக்களிக்கிறார்கள்.

நான் 2019ல் பாராளுமன்ற தேர்தலில் தருமபுரியில் போட்டியிட்டேன். அதற்கு முன்பு நாடாளுமன்ற தேர்தலில் தர்மபுரி மக்கள் பல எதிர்ப்புகளை மீறி எனக்கு வெற்றியை தந்தார்கள். அதிமுக, திமுக, ஆட்சி அதிகாரம், பணபலத்தை மீறி எனக்கு வாக்களித்தார்கள். இவ்வுளவு பார்த்தும் அரசியல் விழிப்புணர்வு வரவில்லை. அந்த போனில் எதனை பார்க்கிறீர்கள்? அதில் எந்த தலைவர் நல்ல தலைவர்? யார் திட்டங்களை சொல்கிறார்? யார் நேர்மையானவர்? யார் தகுதியானவர்? என்ன புதுமை இருக்கிறது? இன்றைய சூழலில் விவசாயிகளுக்கு யார் முன்னுரிமை கொடுக்கிறார்கள்? மண்ணையும் மக்களையும் யார் பாதுகாக்கிறார்கள்? நல்ல நிர்வாகம் குறித்து யார் முன்னிலைப்படுத்துகிறார்கள்? என்பதை போனில் தெரிந்து கொள்ளுங்கள். இந்த விழிப்புணர்வு உங்களுக்கு வந்துவிட்டால், நீங்களே அனைத்தையும் தேர்வு செய்து கொள்வீர்கள்.

தமிழகத்தில் தற்போது மக்களை பிரிக்கின்ற சூழல் இருக்கிறது. நாங்கள் மக்களை சேர்ப்போம். பிரிக்கமாட்டோம். சில கட்சிகள் ஜாதி, மதம், மொழி, இனத்தை வைத்து மக்களை பிரிக்கிறது. பாமக வளர்ச்சியை வைத்து மக்களை இணைக்கிறது. நல்ல கல்வி, சுகாதாரம், நீர் மேலாண்மை, விவசாயத்திற்கு முக்கியத்துவம், வேலைவாய்ப்பு ஆகியவற்றை கொடுத்து மக்களை இணைக்கும். அதுதான் பாமகவுக்கும், பிற கட்சிக்கும் உள்ள வித்தியாசம். இது தான் உண்மையான எதிர்க்கட்சி. பிற கட்சிகள் எதிரிக்கட்சியாக இருக்கின்றன. நல்லது செய்தால் பாராட்டுவோம், கெட்டது செய்தால் கடுமையாக எதிர்ப்போம்.

சமீபத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் சட்டம் பாமகவால் வந்தது. இந்திய அளவில் 90 ஆயிரம் மதுபான கடைகளுக்கு மூடுவிழா நடத்திய கட்சி பாட்டாளி மக்கள் கட்சி. தமிழகக்தில் 3321 கடைகளை மூடிய கட்சி பாட்டாளி மக்கள் கட்சி. பட்டாசுக்கு காலை, மாலை நேரம் ஒதுக்கீடு செய்துள்ளார்கள். டாஸ்மாக்குக்கு காலையில் இருந்து இரவு வரை திறக்க வேண்டும். என்ன நியாயம் இது? டாஸ்மாக்கையும் நேரக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வாருங்கள். குடிப்பதற்கு இலக்கு நிர்ணயம் செய்வதா? வெட்கக்கேடு. தமிழ்நாடு அரசின் 35 % வருமானம் டாஸ்மாக் மூலமாக வருகிறது. அதனாலேயே மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த நாங்கள் வந்துள்ளோம்.

நமக்கு காய்ச்சல் ஏற்பட்டால் எப்படி நடுங்குகிறோம், அதனைப்போலவே பூமியும் நடுங்கும். அதன் அறிகுறியாக தான் புயல், வறட்சி, வெயில், வறுமை என வாட்டி வதைக்க தொடங்கிவிட்டது. இந்தியா, சீனா, அமெரிக்கா என ஒவ்வொரு நாடும் மக்களை பாதுகாக்க அவசர நிலை பிரகடனம் செய்ய வேண்டும். தமிழ்நாடு முதல்வர் அமைச்சர்களை கூட்டி அவசரநிலை பிரகடனம் செய்ய வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளில் எடுக்கப்படும் நடவடிக்கையை அறிவித்து அதனை செயல்படுத்த வேண்டும். இந்நடவடிக்கையை எடுக்க தயங்கினால் பேராபத்து ஏற்படும். உலகிலேயே மிகப்பெரிய பிரச்சனை இதுதான். இதனை தொடர்ந்து பேசுவது பாமக தான். அதிகாரம் இன்று என்னிடம் இருந்திருந்தால் காலநிலை மாற்றம் அவசரநிலையை பிரகடனம் செய்திருப்பேன். இவை அனைத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள். நீங்கள் அனைவரும் மாற்றத்தை ஏற்படுத்த ஒத்துழையுங்கள். நாம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவோம். இம்மாற்றம் கொங்கு மண்ணில் தொடங்க வேண்டும். இந்த மாநாட்டை நடத்திய அனைத்து நிர்வாகிகளுக்கும் எனது வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அன்புமணி பேசினார்.