தமிழக மீனவரை சுட்ட இந்திய கடற்படை மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு!

தமிழக மீனவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இந்திய கடற்படை வீரர்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக கடலோர காவல்படை சார்பில் இந்திய கடற்படை வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறையை சேர்ந்த 10 மீனவர்கள் விசைப்படகில் ராமநாதபுரம், தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ஒன்றாக சேர்ந்து மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய கடற்படையினர் படகை நிறுத்த சொல்லி சிக்னல் கொடுத்தனர். படகை நிறுத்தாமல் வேகமாக மீனவர்கள் படகை செலுத்தினர். இதனையடுத்து சந்தேகமடைந்த இந்திய கடற்படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் மயிலாடுதுறையை சார்ந்த வீரவேல் என்பவருக்கு காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த மீனவரை இந்திய கடற்படையினர் மீட்டு சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மீனவர்களிடம் விசாரணை நடத்தியதில் இலங்கை கடற்படையினர் படகை நிறுத்த சொல்லுவதாக நினைத்து வேகமாக சென்றதாக கூறினர். இந்திய கடற்படையினர் செயலுக்கு தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதனிடையே தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இந்திய கடற்படை வீரர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக கடலோர காவல்படை நடவடிக்கை எடுத்துள்ளது. பயங்கர ஆயுதங்களால் தாக்குதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.