தமிழக முன்னாள் ஆளுநரும் பஞ்சாப் மாநில ஆளுநருமான பன்வாரிலால் புரோகித் புகார் பற்றி தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
2017ம் ஆண்டு அக்டோபர் 6 முதல் 2021 செப்டம்பர் 17 வரை தமிழகத்தின் 14 வது ஆளுநராக பணியாற்றியவர் பன்வாரிலால் புரோகித். இவர் ஆளுநராக இருந்த போது பல்வேறு சர்ச்சைகளிலும், குற்றச்சாட்டுகளிலும் சிக்கியுள்ளார். தொடர்ந்து தற்போது பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராக செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பாக பன்வாரிலால் புரோகித் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பன்வாரிலால் புரோகித் கூறுகையில், நான் 4 ஆண்டுகள் தமிழ்நாட்டின் ஆளுநராக பணியாற்றினேன். அந்த அனுபவம் மிகவும் மோசமாக இருந்தது. தமிழகத்தின் ஆளுநராக இருந்தபோது சட்டப்படி தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு 27 துணைவேந்தர்களை நியமித்த அனுபவம் எனக்கு இருக்கிறது. தமிழகத்தில் துணைவேந்தர் பதவி 40-50 கோடி ரூபாய்க்கு விற்கப்படும் சூழல் இருந்தது என்று குற்றம்சாட்டியுள்ளார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டின் ஆளுநராக 4 ஆண்டுகளுக்கு மேலாக பன்வாரிலால் புரோகித் பணியாற்றியுள்ளார். பன்வாரிலால் புரோகித் ஆளுநராக இருந்த காலத்தில் 27 துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டதாக கூறியுள்ளார். அரசியலமைப்பு அதிகாரம் பெற்ற உயர் பொறுப்பில் உள்ளவர் கூறும் புகாரை வெறும் செய்தியாக கடந்துவிட முடியாது. பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறியுள்ள ஊழல் குற்றச்சாட்டை தமிழக அரசு விசாரிக்க வேண்டும். தவறு நடந்திருந்தால் ஊழல் செய்து துணைவேந்தர் பதவிகளில் அமர்ந்துள்ளவர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிடாமல் தண்டிக்கப்பட வேண்டும். துணைவேந்தர் பணி நியமனம் ஊழல் முறைகேடுகளுக்கு இடம்தராத வகையில் அமைந்திட விதிகளை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.