ஒன்பது பல்கலைக்கழகத் துணை வேந்தர்களை பதவி நீக்கம் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
திருவனந்தபுரத்தில் உள்ள அப்துல்கலாம் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனத்தில், யுஜிசி விதிகள் பின்பற்றப்படவில்லை எனக்கூறி, உச்சநீதிமன்றம் அந்த நியமனத்தை சட்டவிரோதம் என தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து மாநிலத்தின் ஒன்பது அரசுப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களும் பதவி விலக வேண்டும் என கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் டுவிட்டரில் அறிவிப்பு வெளியிட்டார். இது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக பாலக்காட்டில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது:-
பல்கலைக்கழகத் துணை வேந்தர்களை பதவி நீக்கம் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. மத்திய அரசு ஆளுநரை தவறாக பயன்படுத்துகிறது. மத்திய அரசின் கருவியாக ஆளுநர் செயல்படுகிறார். துணைவேந்தர் ஆளுநரால் நியமிக்கப்படுகிறார். நியமனம் விதிகளுக்கு முரணாக இருந்தால், முதன்மை பொறுப்பு கவர்னரையே சாரும். ஆளுநர் சில விஷயங்களை செய்து முடிக்க ஆர்வமாக உள்ளார். ஆளுனர் பதவி என்பது அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக அல்ல. அதீத அதிகாரத்தை பிரயோகிக்கும் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது.
பல்கலைக்கழகங்களுக்கு எதிராக அழிவு நுண்ணறிவுப் போர் நடத்தப்படுகிறது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மற்றும் அவசரச் சட்டங்களில் கையெழுத்திடாமல் ஆளுநர் வேண்டுமென்றே காலதாமதம் செய்கிறார். இது சட்டமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். மசோதாக்களை விசாரிக்க நீதிமன்றங்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யவோ அல்லது புதியவர்களை ஆளுநர் நியமிக்கவோ முடியாது. இது தொடர்பாக முதல்வர்தான் இறுதி முடிவு எடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில் பதவி விலக மறுத்த 9 பல்கலைக் கழக துணை வேந்தர்களுக்கு கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். பதவி விலக மறுப்பது குறித்து நவம்பர் 3ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என 9 பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.