இந்திய முஸ்லீம்களின் அடையாளங்களை அழிப்பதும்; இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைப்பதும் தான் பாஜகவின் கொள்கை என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி தெரிவித்தார்.
சமீபகாலமாக பாஜக மீதும், பிரதமர் நரேந்திர மோடி மீதும் பகிரங்கமாக அசாதுதீன் ஒவைசி குற்றம்சாட்டி வருகிறார். எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேசத்தில் அனைத்து தொகுதிகளிலும் அவர் தனது வேட்பாளர்களை நிறுத்தவுள்ளதாக கூறப்படுகிறது. இதனை முன்னிட்டே, பாஜகவை அவர் கடுமையாக சாடி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஹைதராபாத்தில் இன்று செய்தியாளர்களை ஒவைசி சந்தித்தார். அவர் கூறியதாவது:-
நாட்டின் வளர்ச்சிக்கும், நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கும் மத்திய பாஜக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தியாவின் பொருளாதாரம் அதல பாதாளத்துக்கு சென்று கொண்டிருக்கிறது. அதை சீர் செய்வது, பொருளாதாரத்தை மீட்பது குறித்தோ அரசுக்கு கவலையில்லை. அவர்களின் கவலைகள் எல்லாம் முஸ்லிம்கள் மீதுதான் உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் இன்றைய கொள்கை என்னவென்று தெரியுமா? இந்திய முஸ்லிம்களின் அடையாளங்களை அழிப்பதும், நாட்டின் பன்முகத்தன்மையை சிதைப்பதும் மட்டுமே. முஸ்லிம்களின் ஹலால் உணவும், முஸ்லிம்களின் குல்லாவும், அவர்கள் வைத்திருக்கும் தாடியும் தான் பாஜகவை பயமுறுத்துகிறது. இதுபோன்ற அடையாளங்களை அழிக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிதான் அவர்கள் சிந்தித்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி கூறும் ‘ஒருங்கிணைந்த வளர்ச்சி அனைவருக்குமான வளர்ச்சி’ என்பதெல்லாம் வெறும் வாய்ஜாலம் தான். முஸ்லிம்கள் வளர்ச்சியடைவது அவர்களுக்கு பிடிக்காது. முஸ்லிம்கள் முன்னேறக்கூடாது என்பதே அவர்களின் விருப்பம். அதற்கான எல்லா நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது. ஆனால் இதையெல்லாம் கண்டு இந்திய முஸ்லிம்கள் பயப்பட மாட்டார்கள் என்பதை நாம் பாஜகவுக்கு புரிய வைக்க வேண்டும்.
முஸ்லிம்களின் கல்வி நிலையமான மதரஸா, வழிபாட்டுத் தலமான மசூதி ஆகியவற்றை கூட பாஜக குறிவைக்க தொடங்கியுள்ளது. எதற்காக எங்கள் அடையாளங்கள் மீதும், நம்பிக்கைகள் மீதும் நீங்கள் (பாஜக) குறிவைக்கிறீர்கள்? எதற்காக மதரஸா கண்காணிக்கப்படுகிறது? ஏன் இந்து சமயத்துக்கு சொந்தமான கோயில்கள், குருகுலங்களை கண்காணிக்கக் கூடாது? இவையெல்லாம் முஸ்லிம்களை ஒடுக்குவதற்காக பாஜக, ஆர்எஸ்எஸ் எடுக்கும் முயற்சிகள்தான். இவ்வாறு ஒவைசி பேசினார்.