பாஜகவை எதிர்க்கும் கட்சியானது ஆளும் கட்சியாகவுள்ள மாநிலங்களில் ஆளுநர்கள் தங்கள் அதிகார எல்லையைத் தாண்டி எதிர்க்கட்சித் தலைவர் போல் செயல்படுவதாகவே ஐயம் எழுகிறது என மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழக ஆளுநராக பதவி வகிக்கும் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. தமிழக அரசு அறிமுகம் செய்த சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இதனால் மோதலானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிமுக, பாஜகவைத் தவிர ஆளுநரை குறி வைத்து விமர்சனங்களை தொடுத்து வருகின்றன. மேலும் பல்கலைக் கழக நிகழ்வுகளில் வேந்தர் என்ற முறையில் பங்கேற்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நிகழ்ச்சிகளில் சனாதானம் குறித்து பேசியது தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்புகளும் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. ஆனாலும் அதனை கண்டு கொள்ளாமல் ஆளுநர் சனாதானம் குறித்தே பேசி வருகிறார்.
மேலும் பல்கலைக் கழகங்களில் உயர்கல்வித்துறை சார்பான நிகழ்ச்சிகளை அமைச்சர் பொன்முடி புறக்கணித்த நிகழ்வுகளும் நடைபெற்று வருகிறது. தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களான கேரளா, புதுச்சேரி, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் அரசு மற்றும் ஆளுநர்களிடையேயான மோதல் அதிகரித்து வருகிறது. கேரளாவில் துணைவேந்தர் பதவி தொடர்பாக மோதல் முற்றியுள்ளது.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,”பாஜகவை எதிர்க்கும் கட்சியானது ஆளும் கட்சியாகவுள்ள மாநிலங்களில் ஆளுநர்கள் தங்கள் அதிகார எல்லையைத் தாண்டி எதிர்க்கட்சித் தலைவர் போல் செயல்படுவதாகவே ஐயம் எழுகிறது. கேரள ஆளுநரின் நடவடிக்கைகள் இதற்கு நல்ல உதாரணம். தமிழகத்திலும் இதே போக்குதான் நிலவுகிறது. இதுபோன்ற நிகழ்வுகள் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. மாநில சுயாட்சியை கேள்விக்குறியாக்குகிறது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல்தர இழுத்தடிப்பது; ‘அரசியல்சாசனம் வழங்காத’ பல்கலைக்கழக வேந்தர் என்ற பதவியின் மூலம் அரசியல் செய்வது என்பதெல்லாம் ஆளுநரின் பதவிக்கு அழகல்ல” என கூறப்பட்டுள்ளது.