ரூபாய் நோட்டுகளில் லட்சுமி மற்றும் விநாயகர் படங்கள் இடம் பெற வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி முதல்-மந்திரியும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவில் புதிதாக வெளியிடப்படும் கரன்சி (ரூபாய்) நோட்டுகளில் இந்து கடவுள்களான லட்சுமி மற்றும் விநாயகர் ஆகியோரது உருவங்களை இடம்பெற செய்ய வேண்டும். நாம் முயற்சிகளை மேற்கொண்டாலும், கடவுள்களின் ஆசி இல்லையென்றால் சில சமயங்களில் நம்முடைய அந்த முயற்சிக்கு பலன் இருக்காது. அதனால், புதிதாக வெளியிடப்படும் ரூபாய் நோட்டுகளில் ஒருபுறம் மகாத்மா காந்தி உருவமும், மற்றொரு புறம் பெண் கடவுள் லட்சுமி மற்றும் கடவுள் விநாயகர் படங்கள் இடம்பெற வேண்டும். இரு தெய்வங்களின் உருவங்கள் ரூபாய் நோட்டுகளில் இருப்பது, நாட்டை வளம்பெற செய்ய உதவும். இதனால், நாட்டின் பொருளாதார சூழ்நிலை மேம்படும். ஒட்டுமொத்த நாடும் ஆசிகளை பெறும். இதுபற்றி நாளை அல்லது நாளை மறுநாள் நான் மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளேன். இஸ்லாமிய நாடான இந்தோனேசியாவில் கரன்சியில் விநாயகர் படம் இடம்பெற்றுள்ளது. இந்தோனேசியாவில் செய்ய முடியும்போது நம்மால் முடியாதா? இவ்வாறு அவர் கூறினார்.