கொடநாடு கொலை வழக்கு: எஸ்டேட் ஊழியர்களிடம் சிபிசிஐடி டிஜிபி விசாரணை!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு நடந்த கொடநாடு எஸ்டேட்டில் சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர் நேரடியாக விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்.

நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தங்கி ஓய்வு எடுக்கும் கோடநாடு பங்களாவின் காவலாளி கொல்லப்பட்டு, அங்கிருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த வழக்கில் தொடர்புடைய கனகராஜ், சயான், ஜெம்சீர் அலி, மனோஜ் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய சிலர் மர்மமான முறையில் சாலை விபத்துகளில் உயிரிழந்தனர். இதுமட்டுமல்லாமல் இந்த சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டதாக ஜெயலலிதாவின் காா் ஓட்டுநா் கனகராஜ், கேரள கூலிப்படையைச் சோ்ந்த சயன், வாளையாறு மனோஜ் ஆகியோரை போலீசார் தேடி வந்தனா். சம்பவம் நடந்த சில நாள்களில் கனகராஜ் காா் விபத்தில் உயிரிழந்தாா். சயன், வாளையாறு மனோஜ் உள்பட 10 போ் அந்த ஆண்டு மே மாதம் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனா்.

இந்த வழக்கை மறு விசாரணை செய்ய காவல்துறைக்கு கடந்தாண்டு ஜூலை மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது. வழக்குத் தொடா்புடைய அனைவரிடமும் மேற்கு மண்டல ஐஜி சுதாகா் தலைமையில் தனிப்படை போலீசார் மறு விசாரணை செய்து வந்தனா். ஜெயலலிதாவின் தோழி சசிகலா, முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுகுட்டி மற்றும் ஏற்கனவே விசாரிக்கப்பட்டவர்கள் என பலரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்தநிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கொடநாடு வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏற்கனவே கைப்பற்றப்பட்ட விசாரணை விவரங்கள், வாக்குமூல விவரங்களை தனிப்படையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதன் அறிக்கை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். கடந்த 22ம் தேதி கொடநாடு எஸ்டேட்டுக்கு சிபிசிஐடி போலீசார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது எஸ்டேட் மேலாளர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து கூடுதல் விசாரணைக்காக ஓரிரு நாட்களில் திரும்ப வருவோம் எனவும், ஊழியர்கள் யாரும் வெளியூர் செல்ல வேண்டாம் என சிபிசிஐடி அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர்.

அதன்படி இன்று கொடநாடு எஸ்டேட்டில் மீண்டும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விசாரணையில் சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர் நேரடியாக ஈடுபட்டு ஆய்வு நடத்தி வருகிறார். கொடநாடு கொலை, கொள்ளை நடந்த இடத்தில் சிபிசிஐடி டிஜிபியே நேரடியாக விசாரணை நடத்தி வருவது, இந்த வழக்கு அடுத்தக் கட்டத்திற்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.