கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் குறித்து என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கோவை, உக்கடம் பகுதியில் 23-10-2022 அன்று நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை குறித்தும், பொதுவான சட்டம்- ஒழுங்கு நிலவரம் குறித்தும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் இன்று (26-10-2022) தலைமைச் செயலகத்தில் விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், மேற்படி கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை குறித்தும், கோவை மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை குறித்தும், கோவை மாவட்டத்தில் பாதுகாப்பினை மேலும் உறுதி செய்திடவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதுபோன்ற சம்பவங்களின் விசாரணையில், மாநிலம் தாண்டிய பரிணாமங்களும், பன்னாட்டுத் தொடர்புகளும் இருக்க வாய்ப்புள்ளதால், இவ்வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றிட ஒன்றிய அரசுக்கு உரிய பரிந்துரைகளை செய்திட இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மேலும், கோவை மாநகரின் பாதுகாப்பினை மேலும் வலுப்படுத்திட கரும்புக் கடை, சுந்தராபுரம், கவுண்டம்பாளையம் ஆகிய மூன்று பகுதிகளில் புதிய காவல் நிலையங்களை உடனடியாக அமைத்திடவும்; மாநிலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள், சம்பவங்கள் வருங்காலங்களில் நடைபெறாமல் தடுத்திடும் வகையில், காவல் துறையில் ஒரு சிறப்புப் படையை உருவாக்கிடவும், கோவை உட்பட தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலும், மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய முக்கிய பகுதிகளிலும், கூடுதல் நவீன கண்காணிப்புக் கேமராக்களை விரைவில் பொருத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்; மாநிலத்தின் உளவுப் பிரிவில் கூடுதல் காவல்துறை அலுவலர்களை நியமனம் செய்திடவும்; இதுபோன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோரைப் பற்றியும், அவர்களோடு தொடர்பு வைத்திருப்பவர்களைப் பற்றியும் நுண்ணிய தகவல்களை அளிப்போருக்கு தக்க பாதுகாப்பினை வழங்கிடவும், அவர்களை ஊக்குவித்திடவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டார்.
இந்தக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. பணீந்திர ரெட்டி, இ.ஆ.ப., காவல் துறை தலைமை இயக்குநர் முனைவர் செ. சைலேந்திர பாபு, இ.கா.ப.,, காவல்துறை கூடுதல் இயக்குநர் (நுண்ணறிவு) திரு. சௌ. டேவிட்சன் தேவாசிர்வாதம், இ.கா.ப., மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கோவையில் தற்போது என்.ஐ.ஏ முகாமிட்டுள்ளது. என்.ஐ.ஏ டிஐஜி வந்தனா, எஸ்.பி ஸ்ரீஜித் தலைமையிலான என்.ஐ.ஏ குழுவினர் வருகை புரிந்து கோவை மாநகர போலீசாருடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். கார் வெடிவிபத்து தொடர்பான தகவல்கள் குறித்து கேட்டறிந்து வருகின்றனர். இதையடுத்து விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து விசாரிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.