மோடி வழியை பின்பற்றினால் அண்ணாமலைக்கு நல்லது: கே.எஸ்.அழகிரி!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையால் பத்திரிகையாளர்களிடம் கண்ணியத்துடனும், சுயகட்டுப்பாடுடனும் நடந்து கொள்ள முடியாவிட்டால் மோடியை போலவே பத்திரிக்கையாளர்களை சந்திப்பதை தவிர்த்துக்கொள்வது அவரது எதிர்காலத்துக்கு நல்லது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார்.

திமுக அரசு தாய்மொழிக்கு முடிவுரை எழுத முயற்சி செய்வதாக கூறி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மூத்த நிர்வாகிகள் கலந்துகொண்டு உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு செய்தி சேகரிக்க வந்த பத்திரிகையாளர்கள் மைக்குகளுடன் அண்ணாமலை அருகே சென்று பேட்டி எடுக்க முயன்றனர். அப்போது அவர்களை நோக்கி அண்ணாமலை ஆவேசமாகவும், அவமதிக்கும் வகையிலும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. “மரத்தின் மேல் குரங்கு தாவுவதைபோல் சுற்றி சுற்றி வருகிறீர்களே. சாப்பிட செல்லும்போது நான் என்ன சொன்னேன்? மரியாதையாக நின்று நீங்கள் எல்லாம் சாப்பிடுங்கள் என்று சொன்னேனா? ஊரில் நாய், பேய், சாராயம் விற்பவர்கள் சொல்வதை எல்லாம் கேட்பீர்கள். அதற்கு பதில் சொல்ல வேண்டுமா? நகருங்கள்” என்று காட்டமாக சொல்லிவிட்டு சென்றார்.

அண்ணாமலை பத்திரிகையாளர்களிடம் நடந்துகொண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அண்ணாமலை பத்திரிகையாளர்களை நோக்கி ஆவேசமாக பேசிவிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. பத்திரிகையாளர் அமைப்புகள் உட்பட பல்வேறு தரப்பினர் அண்ணாமலையின் நடத்தைக்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி டுவிட்டரில், “மனம் போன போக்கில் வாயில் வருவதை எல்லாம் வார்த்தைகளாக அண்ணாமலை பேசுவது அநாகரிகமானது. ஒரு அரசியல் கட்சியின் தலைவர் பத்திரிக்கையாளர்களிடம் கண்ணியத்துடனும், சுயகட்டுப்பாடுடனும் நடந்து கொள்ள வேண்டும். அப்படி நடந்து கொள்ள முடியவில்லை என்றால் அவரது தலைவர் மோடியை போலவே பத்திரிக்கையாளர்களை சந்திப்பதை தவிர்த்துக் கொள்வது அண்ணாமலையின் எதிர்கால அரசியலுக்கு நல்லது” என்று அவர் பதிவு செய்து இருக்கிறார்.