இலங்கை கடற்படையினரின் தமிழக மீனவர்களின் மீதான துப்பாக்கிச் சூட்டுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறார்கள். சுற்றி வளைப்பது, துரத்தி துரத்திச் சுடுவது, படகுகளை பறிமுதல் செய்வது, வளைகளை அறுப்பது, பிடித்த மீன்களை கடலில் கொட்டுவது, சிறையில் அடைப்பது என சர்வதேச கடல் எல்லை மீன்பிடி விதிகளை அப்பட்டமாக இலங்கை கடற்படை மீறி வருகிறது. தொடரும் இச்செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது.
தற்போது இந்திய கடற்படையினராலும் தமிழக மீனவர்களுக்கு இடர்கள் ஏற்படுகிறது. கோடியக்கரையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான ஐஎன்எஸ் பங்காரம் என்ற கப்பல், படகுகளை நிறுத்துமாறு எச்சரித்துள்ளது. தொடர் மழை, இலங்கை கடற்படையினரால் ஏற்படும் அச்ச சூழல் என தமிழக மீனவர்கள் கடந்து செல்லும் போது, இந்தியக் கடற்படையினர் நடத்தியச் துப்பாக்கிச் சூட்டில் வீரவேல் என்ற மீனவரின் வயிற்றிலும், தொடையிலும் குண்டு பாய்ந்தது.
மீனவர்களின் படகுகளை வளைத்து, தடுத்து விசாரிக்க இயலும். அவ்வாறு இல்லாமல் துப்பாக்கிச் சூடு என்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பாளிக்க வேண்டிய கடற்படையினரே துப்பாக்கிச் சூடு நடத்துவது எந்த வகையிலும் ஏற்க இயலாது. ஒன்றிய அரசு உடனடியாக இதில் கூடுதல் கவனம் செலுத்தி தமிழக மீனவர்களின் வாழ்வாதாரச் சூழலை உறுதிப்படுத்த வேண்டும். இனி இதுபோல் நிகழாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.