திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பேச்சாளர் சைதை சாதிக் பாஜகவில் 4 நடிகைகள் இருப்பதாக குஷ்பு, நமிதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோரை ஒருமையில் பேசியதற்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி அதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.
திமுகவை சேர்ந்த பிரபல பேச்சாளரான சைதை சாதிக் ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது அதிகளவில் பகிரப்பட்டு கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2வது முறையாக திமுக தலைவராக தேர்வுசெய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்து சென்னை ஆர்.கே.நகரில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் உரையாற்றி திமுக பேச்சாளர் சைதை சாதிக், பாஜகவில் 4 நடிகைகள் இருக்கிறார்கள் என்று குஷ்பு, நமிதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோரை குறிப்பிட்டு ஒருமையில் பேசினார்.
“நாங்கள் வட சென்னையில் கட்சியை வளர்த்தோம். அந்த காலத்திலிருந்து அண்ணன் சீதாபதியில் இருந்து, டி.ஆர்.பாலுவிலிருந்து, பலராமனில் இருந்து, இளைய அருணா வரை திமுகவில் வளர்த்து உள்ளார். இன்னும் வளர்த்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், பாஜகவில் இருக்கும் தலைவர்களை பொறுத்தவரை 4 பேருமே ****.” என்று ஆங்கிலத்தில் தவறான அர்த்தம் தரும் வார்த்தையை பயன்படுத்தினார். “குஷ்பு தாமரை மலர்ந்தே தீரும் என்று தலை மேல் கையை உயர்த்தி சொல்கிறார்.” என்று ஒருமையில் பேசிய சாதிக், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தலைமுடி பற்றியும் விமர்சித்து பேசியுள்ளார். இதனைத் தொடர்ந்து குஷ்பு திமுகவில் இருக்கும்போது அவரை வைத்து இளைய அருணா கூட்டம் கூட்டியதை இரட்டை அர்த்தத்தில் சைதை சாதிக் பேச அங்கு சிரிப்பலை எழுந்தது. சுதாரித்துக்கொண்ட அவர் நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை, வம்பில் மாட்டிவிடாதீர்கள் என்று கூறி அங்கிருந்தவர்களை பார்த்து சிரித்தார்.
“இவர்கள் எல்லாம் சேர்ந்து திமுகவை அழித்துவிட நினைத்தால் முடியுமா? கடந்த 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா முதலமைச்சர், ஓபிஎஸ் முதலமைச்சர், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தனர். இந்த 3 முதலமைச்சர்கள் வடசென்னைக்கு என்ன செய்தார்கள்? ஆர்.கே.நகருக்கு என்ன செய்தார்கள்? தமிழ்நாட்டுக்கு என்ன செய்தார்கள்? என்று கூட்டம் போட்டு பேச சொன்னால் பேச மறுக்கிறார்கள். இதே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நாங்கள் 20 நாட்கள் கஷ்டப்பட்டோம். வெற்றிபெற முடியவில்லை. ஆனால், 20 ஆண்டுகள் கழித்து ஆர்.கே.நகர் தொகுதியில் கருப்பு சிவப்பு கொடியேற்றிய நமது தலைவர் ஸ்டாலின்” என்று பேசினார்.
சைதை சாதிக்கின் இந்த பேச்சுக்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள குஷ்பு, “பெண்களை ஆண்கள் இழிவுபடுத்தும்போது, அவர்கள் வளர்ந்த விதத்தையும், அவர்கள் வளர்க்கப்பட்ட நச்சுத்தன்மையான சூழலையும் காட்டுகிறது. ஒரு பெண்ணின் கருப்பையை ஆண்கள் அவமதிக்கிறார்கள். இந்த ஆண்கள்தான் தங்களை கலைஞரின் சீடர்கள் என்று அழைக்கிறார்கள். இதுதான் முதலமைச்சர் ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியா?” என்று கேள்வி எழுப்பி அவரையும், திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழியை டேக் செய்துள்ளார்.
இதற்கு டுவிட்டரில் பதிலளித்த கனிமொழி, “ஒரு சக பெண்ணாக, மனிதராகவும் இந்த பேச்சுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இது பேசப்பட்ட இடம், அவர்கள் அங்கம் வகிக்கும் கட்சி என்று எதுவாக இருந்தாலும் இதை ஏற்க முடியாது. வெளிப்படையாக இதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். முதலமைச்சர் முக ஸ்டாலினாலும், திமுகவாலும் இந்த பேச்சை ஒருபோது ஏற்க முடியாது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட கனிமொழிக்கு நடிகை குஷ்பூ நன்றி கூறியுள்ளார். இதுதொடர்பாக குஷ்பு டுவிட்டர் பக்கத்தில், ‘மிக்க நன்றி கனி. உங்களது நிலைப்பாட்டையும், ஆதரவையும் உண்மையிலேயே பாராட்டுகிறேன். ஆனால் நீங்கள் பெண்களின் கண்ணியம் மற்றும் சுயமரியாதைக்காக எப்போதும் துணை நிற்கும் ஒருவராக இருந்திருக்கிறீர்கள்’ என, கனிமொழியை குஷ்பு பாராட்டி கருத்து தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் திமுக, பாஜக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.