சென்னை விமான நிலையத்தில் இருந்து அந்தமான் செல்லும் விமானத்தில் ஏறச் செல்லும்போது எஸ்கலேட்டரில் சிக்கி சிறுவனின் கை நசுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தமானை சேர்ந்தவர் ஐசக். இவர், தீபாவளி விடுமுறையில் தனது மனைவி மகன் மற்றும் 4 வயதுப் பேரக் குழந்தையுடன் தமிழ்நாட்டிற்கு உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார். விடுமுறை முடிந்து நேற்று குடும்பத்துடன் அந்தமான் திரும்ப முடிவு செய்தனர். அதன்படி நேற்று பகல் 12.05 மணிக்கு சென்னையில் இருந்து தனியார் பயணிகள் விமானத்தில் அந்தமான் செல்ல சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்தனர். போர்டிங் பாஸ் வாங்கிவிட்டு, பாதுகாப்புச் சோதனை உள்பட அனைத்து சோதனையும் முடித்தனர். பின்னர் விமானத்தில் ஏற எஸ்கலேட்டர் மூலம் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஐசக்கின் 4 வயது பேரன் ஜெய்டனின் இடது கை விரல்கள் எதிர்பாராதவிதமாக எஸ்கலேட்டரில் சிக்கி நசுங்கியது. இதனால், வலியில் சிறுவன் அலறித் துடிக்க, சிறுவனின் குடும்பத்தினர் பதறிப்போயினர். இதையடுத்து, உடனடியாக விமான ஊழியர்கள் எஸ்கலேட்டரை நிறுத்தினர். அதோடு சிறுவன் ஜெய்டன் உட்பட ஐசக் குடும்பத்தினரை, எஸ்கலேட்டரில் இருந்து இறக்கினர்.
சென்னை விமான நிலைய மருத்துவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் விரைந்து வந்து சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெறவேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து, ஐசக் குடும்பத்தினர் அந்தமான் பயணத்தை ரத்து செய்துவிட்டு, குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிறுவனை சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்தச் சம்பவம் காரணமாக அந்தமான் செல்ல வேண்டிய விமானம் 40 நிமிடங்கள் தாமதமாக பகல் 12.45 மணிக்கு சென்னையிலிருந்து அந்தமான் புறப்பட்டுச் சென்றது. இந்தச் சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.