முதல்வர் மு.க.ஸ்டாலினின் பசும்பொன் பயணம் திடீர் ரத்து!

முதல்வர் மு.க.ஸ்டாலினின் பசும்பொன் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் பரிசோதனை மேற்கொள்ள சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அவர் நேற்றிரவு (அக்டோபர் 28) சென்றார். அங்கு அவரை சிறப்பு மருத்துவர்கள் குழு பரிசோதனை செய்தது. பரிசோதனை முடிந்து முதலமைச்சர் ஸ்டாலின் நேற்றே வீடு திரும்பினார்.

இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், முதுகு வலிக்கான வழக்கமான பரிசோதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு செய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் பசும்பொன் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க இன்று மாலை மதுரை பயணம் மேற்கொள்ள இருந்தார். சென்னையில் இருந்து இன்று மாலை 6 மணியளவில் விமானம் மூலம் மதுரை செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. மதுரையில் இன்று இரவு தங்கி ஞாயிற்றுக்கிழமை காலை மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவும், அங்குள்ள மருதுபாண்டியர் சிலைக்கு மரியாதை செலுத்தவும் பயணத் திட்டம் வகுக்கப்பட்டது. அதன் பிறகு பசும்பொன் கிராமம் சென்று முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சி முடிந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ( 30ஆம் தேதி) பிற்பகல் சென்னை திரும்ப உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் முதுகுவலி காரணமாக நீண்ட பயணங்களை தவிர்க்க மருத்துவர்கள் அறிவுறுத்தியதன் பேரில் முதல்வர் ஸ்டாலினின் பசும்பொன் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.