பொதுமேடையில் எவ்வளவு கேவலமாக வேண்டுமானாலும் பேசி விட்டு சாரி என்று சொல்லி விட்டால் போதுமா? தி.மு.க. நிர்வாகி சைதை சாதிக் மீது வழக்கு தொடர போவதாக குஷ்பு கூறியுள்ளார்.
தி.மு.க. பேச்சாளர் சைதை சாதிக் என்பவர் சமீபத்தில் நடிகை குஷ்புவை பொதுக்கூட்ட மேடையில் சர்ச்சைக்குரிய வகையில் ஆபாசமாக விமர்சித்து பேசினார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதற்கு பெண்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குஷ்புவும் கடும் கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக கனிமொழி எம்.பி. ஒரு பெண்ணாகவும், மனித நேயத்துடனும் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்தார். அதற்கு குஷ்பு பதிலுக்கு நன்றி கூறினார்.
இந்த விவகாரத்தில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது குஷ்புவை அதிருப்தி அடைய செய்து உள்ளது. இது தொடர்பாக குஷ்பு கூறியதாவது:-
மிகவும் கீழ்த்தரமாக பொதுமேடையில் பேசியதை தமிழகமே கேட்டு உள்ளது. பேசியவர் மன்னிப்பு கேட்டாயிற்றே இத்துடன் இந்த பிரச்சினையை விட்டு விடலாமே? என்று தி.மு.க.வை சேர்ந்த சிலர் பேசுகிறார்கள். அவர்களுக்கு நான் கேட்பது ஒன்றே ஒன்று தான். உங்கள் குடும்ப பெண்களையும் இதே போல் ஒருவர் பேசினால் நீங்கள் பரவாயில்லை விட்டு விடுவோம் என்று சும்மா விட்டு விடுவீர்களா? இந்த சம்பவத்தால் என் மனசு எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டு இருக்கும் என்பதை பெண்ணாக பிறந்த ஒவ்வொருவரும் உணர்ந்து புரிந்து கொள்வார்கள். இதை நான் சாதாரணமாக விட்டு விடப்போவதில்லை. தேசிய மகளிர் ஆணையத்தில் வழக்கு தொடுக்க போகிறேன்.
எனக்கும் 19 மற்றும் 22 வயதில் 2 மகள்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்ன நினைப்பார்கள். உன்னை எவ்வளவு தரக்குறைவாக பொது மேடையிலேயே பேசிய போதும் நீ தைரியமாக என்ன செய்தாய்? என்று என் மகள்கள் என்னிடம் கேட்பார்கள் அல்லவா? என் மகள்களை போல எத்தனையோ பெண் குழந்தைகள் என்னை ஒரு ரோல் மாடலாக ஏற்று இருக்கிறார்கள். நான் பயந்து ஒதுங்கினால் அவர்கள் எல்லாம் என்னை பற்றி என்ன நினைப்பார்கள். அவர்கள் எதிர்காலத்தில் தைரியமாக ஒவ்வொரு பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டும் அல்லவா? பொதுமேடையில் எவ்வளவு கேவலமாக வேண்டுமானாலும் பேசி விட்டு சாரி என்று சொல்லி விட்டால் போதுமா? அப்படி பேசியவரை அப்படியே விட்டு விடலாமா? இந்த பிரச்சினையில் நான் பயந்து ஒதுங்கி விடவும் மாட்டேன். விட்டு விடவும் மாட்டேன்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காலையில் தூங்கி விழிக்கும்போது பயந்து கொண்டே எழும்புவதாகவும், தி.மு.க. கட்சி நிர்வாகிகள் யார் என்ன பிரச்சினையை இழுத்து வைத்து உள்ளார்களோ? என்று நினைத்து கொண்டு தூக்கமின்றி தவிப்பதாக கூறியிருந்தார். இப்போது அவர் நினைத்தது போலவே அவரது கட்சிக்காரர் ஒருவர் இவ்வளவு கீழ்த்தரமாக நடந்து இருக்கிறார். நாகரீகமே இல்லாமல் பேசிய அவர் மீது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுத்தார். இதுவரை ஏன் அவரை கட்சியை விட்டு நீக்கவில்லை? நான் முதல்-அமைச்சரிடம் கேட்கும் ஒரே ஒரு கேள்வி இது தான். வேறு எந்த கட்சிக்காரர்களாவது உங்கள் கட்சியை சேர்ந்த பெண்களை இது போல பேசி இருந்தால் சும்மா விட்டு விடுவீர்களா? இதற்குள் வழக்கு போட்டு உள்ளே தள்ளி இருப்பீர்கள். அவர் வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று அதகளம் செய்து இருப்பீர்கள். ஆனால் நான் பாரதிய ஜனதாவில் இருப்பதால் தான் நீங்கள் இதை கண்டு கொள்ளவில்லை. இதுவரை மவுனம் காத்து வருகிறீர்கள். நாங்கள் உங்களுக்கு ஓட்டு போடாதவர்களாக இருக்கலாம். ஆனாலும் உங்கள் மாநிலத்தில் இருக்கும் அத்தனை பெண்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் முதல்வர் நீங்கள். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. ஒரு பெண் பாதிக்கப்பட்டும் நீங்கள் எதுவும் செய்யாமல் இருப்பது ஏன்?
யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை மிகவும் அபாயகரமானது. உங்கள் கட்சிக்காரர்களால் உங்களுக்கு தூக்கம் வராமல் இருக்கலாம். இப்போது உங்கள் கட்சிக்காரர்களால் எங்களை போன்ற பெண்களுக்கு தூக்கம் கெட்டு போகிறதே? இதற்கு பதில் சொல்வது யார்? இந்த விவகாரத்தை நான் சாதாரணமாக விடப்போவது இல்லை. இனிமேலும் யாரும் பெண்களை கீழ்த்தரமாக விமர்சிக்க முடியாத நிலையை உருவாக்க வேண்டும். எதற்கெடுத்தாலும் கண்டனம் தெரிவித்து முன் வரும் கட்சிகள் எல்லாம் இப்போது எங்கே போனது. ஏன் ஒருவர் கூட வாய் திறக்கவில்லை. மற்ற கட்சிகளில் இருக்கும் பெண்களுக்கு ஒரு நியாயம், பாரதிய ஜனதாவில் இருக்கும் பெண்களுக்கு ஒரு நியாயமா? இவ்வாறு குஷ்பு கூறினார்.