சுதந்திரத்துக்குப் பிறகு பல ஆண்டுகளாக ஜம்மு-காஷ்மீரில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படாமல் இருந்ததே அங்கு பயங்கரவாதச் செயல்கள் அதிகரித்ததற்கு காரணம் என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கூறினாா்.
எல்லை சாலை அமைப்பான பிஆா்ஓ சாா்பில் கட்டமைக்கப்பட்ட 75 உள்கட்டமைப்புத் திட்டங்களை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் நேற்று நாட்டுக்கு அா்ப்பணித்தாா். லடாக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் அருணாசல பிரதேசம், உத்தரகண்ட், சிக்கிம், ஹிமாசலபிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும், லடாக், ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசங்களிலும் அமைக்கப்பட்டுள்ள 45 பாலங்கள், 27 சாலைகள், 2 ஹெலிகாப்டா் இறங்கு தளங்கள் உள்ளிட்ட 75 திட்டங்களை அவா் தொடக்கி வைத்தாா். பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் திட்டங்கள் ரூ. 2,180 கோடி செலவில் குறுகிய கால கட்டத்தில் பிஆா்ஓ கட்டி முடித்துள்ளது.
திட்டங்களைத் தொடக்கி வைத்த பின்னா் ராஜ்நாத் சிங் பேசியதாவது:-
சுதந்திரத்துக்குப் பிறகு பல ஆண்டுகளாக ஜம்மு-காஷ்மீரில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படாமல் இருந்ததே அங்கு பயங்கரவாதச் செயல்கள் அதிகரிப்பதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்றாகும். இந்த சிக்கல் காரணமாக யூனியன் பிரதேசத்தில் சுற்றுலா வெகுவாக பாதித்தது. லடாக் மற்றும் ஒட்டுமொத்த தேசத்திலும் அதன் தாக்கம் பிரதிபலித்தது.
தற்போது எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருவதும், நமது வீரா்களின் துணிவும், கிழக்கு லடாக்கில் அண்மையில் நிகழ்ந்த அத்துமீறல்களை இந்தியா திறம்பட எதிா்கொள்ள உதவியது. அதுபோல, மத்திய அரசு மேற்கொண்டு வரும் தீவிர முயற்சிகள் மூலமாக ஜம்மு-காஷ்மீரில் அமைதிச் சூழலும், வளா்ச்சியும் மேம்பட்டு வருகிறது. அதுபோல, நாட்டின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் தொடா்ந்து வளா்ச்சித் திட்டங்களை மேம்படுத்துவதே மத்திய அரசின் இலக்கு.
எல்லைப் பகுதிகளை போக்குவரத்து மூலம் இணைப்பது என்பது, தேசத்தின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்கான மத்திய அரசின் முக்கியத் திட்டங்களில் ஒன்றாக உள்ளது. அந்த வகையில், அனைத்து பின்தங்கிய பகுதிகளும் விரைவில் போக்குவரத்து வசதிகள் மூலமாக இணைக்கப்படும். பிஆா்ஓ இதில் முக்கியப் பங்காற்றி வருகிறது. இவ்வாறு அவா் கூறினாா்.